Published : 16 Oct 2024 06:45 AM
Last Updated : 16 Oct 2024 06:45 AM
சென்னை: சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் தேமுதிக அலுவலகத்தில் தங்குவதற்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தங்களது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் அக்.15, 16, 17 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அவசர மையத்தின் உதவி பொதுமக்களுக்கு கிடைக்க தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவரவர் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துகொள்ள அரசுடன் இணைந்து செயல்பட வேண்டுகிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை அறிக்கை எச்சரித்துள்ளது. மழைக்கால பேரிடரை எதிர்கொள்ளவும், மக்கள் இயல்பு வாழ்க்கையை பாதுகாக்கவும் தமிழக அரசு தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த இயற்கை பேரிடரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாக்கவும், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடி நிவாரணம் கிடைக்கவும் இந்திய கம்யூனிஸ்ட் அமைப்புகளும், உறுப்பினர்களும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: தமிழகம் முழுவதும் கனமழை பெய்துவரும் நிலையில், தேமுதிகவின் அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் அவரவர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவியை உடனடியாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
‘இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே’ என்ற நமது கொள்கையின்படி நம்மால் இயன்ற உதவியை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்வோம். சென்னையில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்குவதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். அங்கு தங்குபவர்களுக்கு தேவையான உணவும் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT