Published : 16 Oct 2024 05:55 AM
Last Updated : 16 Oct 2024 05:55 AM
சென்னை: சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய வெள்ளநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், துணை முதல்வர் உதயநிதி நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை மண்டலம் ஜானி ஜக்கான் முதல் தெரு, முசிறி சுப்பிரமணியன் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அப்பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு சிற்றுண்டி வழங்கினார்.
தொடர்ந்து நேற்று காலை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை மற்றும் புகார் பெறும் மையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து பேரிடர் அபாய குறைப்பு முகமையிலும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் கனமழை காரணமாக விழுந்த 8 மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க, சென்னையில் 300 நிவாரண மையங்கள், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 நிவாரண மையங்கள் என மொத்தம் 931 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த நிவாரண மையங்களில் தண்ணீர், பால் பாக்கெட், பிஸ்கெட், பிரட், உணவு ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 35 பொது சமையலறைகள் தயார் நிலையில் உள்ளன.
கணேசபுரம், பெரம்பூர் உள்ளிட்ட சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது. இதேபோல் நீர் தேங்கியுள்ள 300-க்கும் மேற்பட்ட இடங்களில் நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் எங்கும் மின்தடை ஏற்படவில்லை. கடந்த 12 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 1,500 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்புக்குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 26 இடங்களில் பணிபுரிய தயார் நிலையில் உள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட சென்னையில் 89 படகுகளும், பிற மாவட்டங்களில் 130 படகுகளும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT