Published : 16 Oct 2024 06:31 AM
Last Updated : 16 Oct 2024 06:31 AM
சென்னை: சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்ததால், 8 சுரங்கப்பாதைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன. சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போக்குவரத்து போலீஸார் நேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
முதல் கட்டமாக மழைநீர் சூழ்ந்ததால் பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம், சூரப்பட்டு அண்டர் பாஸ் ஆகிய 8 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
தண்ணீர் தேக்கம், வாகன நெரிசல் காரணமாக மேட்லி சுரங்கப்பாதை - கண்ணம்மாபேட்டை - முத்துரங்கன் சாலை - 17 அடி சாலை - அரங்கநாதன் சுரங்கப்பாதை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. பெரம்பூர் சுரங்கப்பாதை - முரசொலி மாறன் பாலம், சுதந்திர தின பூங்கா முதல்நாகாஸ் - வள்ளுவர் கோட்டம் சந்திப்பிலிருந்து நாகாஸ் நோக்கி வரும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலை சந்திப்பு வழியாக லயோலா கல்லூரிக்கு திருப்பி விடப்பட்டன. பெரியார் பாதையிலிருந்து நெற்குன்றம் பாதைக்கு வரும் வாகனங்கள், வடபழனியில் திருப்பி விடப்பட்டன. வெளியே செல்லும் வாகனங்கள் கோயம்பேட்டில் திருப்பி விடப்பட்டுள்ளன.
மழைநீர் தேங்கியதால் புரசைவாக்கம் தானா தெரு, ஈவெரா சாலை, குருசாமி பாலத்தின் கீழ் பகுதி, பி.எஸ்.சிவசாமி சாலை, சேமியர்ஸ் சாலை, உடுப்பி முனை, வெலிங்டன் முதல் டேம்ஸ் ரோடு, சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ், டேங்க் பங்க் ரோடு, ஸ்டெர்லிங் சாலை,பெரியார் பாதை முதல் நெற்குன்றம் பாதை, வடபழனி, தாஜ் வெலிங்டன் ஓஎம்ஆர், நீலாங்கரை, அதே பகுதி அண்ணா சாலை முதல் எம்ஜிஆர் சாலை வரை, பிராட்வே சந்திப்பு, பிரகாசம் சாலை, அண்ணா சாலை உட்பட நேற்று 51 சாலைகளில் வாகனங்கள்மெதுவாக சென்றன.
மாற்று பாதைகள்: ஐஸ் ஹவுஸில் இருந்து ராயப்பேட்டை மருத்துவமனை சந்திப்புக்கு வரும் இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை நோக்கி வலதுபுறம் திரும்பி, ரத்னா கபே வழியாக ஜாம் பஜார் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, மார்க்கெட் மற்றும் ராயப்பேட்டை டவர் வழியாக செல்ல வேண்டும். மேலும், இருசக்கர வாகனங்கள் திசை திருப்பப்படாமல் தங்கள்வழியில் செல்லலாம். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சந்திப்பிலிருந்து ஐஸ் ஹவுஸ் வரும் வாகனங்களுக்கு மாற்றம் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT