

திருநெல்வேலி: “மழை வெள்ள மீட்பு பணிகளுக்காக சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு பணியாற்ற செல்ல மாட்டோம்” என்று திருநெல்வேலியில் தூய்மை பணியாளர்கள் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. “தனியார் நிறுவனத்தின் கீழ் பணியாற்ற விரும்பவில்லை. மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களாகவே பணியாற்ற விரும்புகிறோம்” என்று வலியுறுத்தி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியில் உள்ளனர். இதில் 200-க்கும் குறைவான பணியாளர்களே மாநகராட்சியின் நேரடி நிரந்தர பணியாளர்கள். 600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் ராம் அன்ட் கோ என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 523 தொழிலாளர்கள் சுய உதவிக் குழுக்கள் மூலமாக தூய்மைப் பணிகளை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் கடந்த மாதம் சுய உதவிக் குழுக்கள் மூலமாக பணியாற்றி வருவோருக்கு ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அவர்கள் சுய உதவி குழுக்கள் மூலமாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது தூய்மை பணிகளை ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ள ராம் அன்ட் கோ நிறுவனம், அவர்களுக்கு ஊதியத்தை வழங்கியுள்ளது. இதன்மூலம் சுய உதவி குழுக்களின் கீழ் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனத்தின் கீழ் பணி அமர்த்தப்பட்டனர். இது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற பணியாளர்கள், அலுவலர்களை நேரில் சந்தித்து சுய உதவிக் குழு ஒப்பந்த பணியாளர்களாகவே பணியாற்ற விரும்புவதற்கான கோரிக்கை மனுக்களை தனித்தனியே வழங்கினர்.
பின்னர் அவர்கள் கூறியதாவது: “கரோனா காலத்தில் இரவு பகல் பாராமல் பணியாற்றினோம். கடந்த மழை வெள்ள காலங்களிலும் ஓய்வின்றி உழைத்தோம். திருநெல்வேலி மட்டுமல்ல சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் சென்று மழை வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டோம். தற்போது ராம் அன்ட் கோ என்ற நிறுவனத்தின் கீழ் எங்களை சேர்த்துள்ளனர். இதனால் மிகுந்த அதிருப்தியில் உள்ளோம். பெருவள்ள காலத்தின்போது சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று பணியாற்ற மாட்டோம். குப்பை அள்ளுவதை தவிர வேறு எந்த பணியையும் மேற்கொள்ள மாட்டோம்.
மாநகராட்சியின் நேரடி ஒப்பந்த பணியாளர்களாகவே நாங்கள் பணியாற்ற விரும்புகிறோம். மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாள் ஒன்றுக்கு ரூ.520 கூலியை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர். தமிழகத்தில் பெருமழை வெள்ளம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், களத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனத்திற்கு தூய்மை பணி ஒப்பந்தம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாற்ற மறுத்துள்ளது அரசு நிர்வாகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.