தொடர் மழையால் 2 மாதங்களுக்குப் பிறகு மூல வைகையில் நீர்வரத்து: குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையினால் மூல வைகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. இடம்: கண்டமனூர் - படம்: கணேஷ் ராஜ்
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையினால் மூல வைகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. இடம்: கண்டமனூர் - படம்: கணேஷ் ராஜ்
Updated on
1 min read

கண்டமனூர்: நீரின்றி வறண்டு கிடந்த மூல வைகையில் 2 மாதத்துக்குப் பிறகு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், மூல வைகை நீரை நம்பியுள்ள உள்ளாட்சி கிராமங்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான வெள்ளிமலை, அரசரடி, இந்திரா நகர், புலிக்காட்டு ஓடை, பொம்முராஜபுரம், காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதியில் பெய்யும் மழைநீர் மூல வைகையாக உருவெடுக்கிறது. இந்த நீர் அம்மச்சியாபுரம் எனும் இடத்தில் முல்லைப் பெரியாறுடன் இணைந்து வைகை அணைக்குச் செல்கிறது. கடந்த 2 மாதமாக போதிய அளவு மழையில்லாததால் மூல வைகை வறண்டே காணப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த லேசான மழையால் மூல வைகையின் முகத்துவாரத்தில் மட்டும் நீரோட்டம் இருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மூல வைகையின் வழிநெடுகிலும் நீரோட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், சின்னச்சுருளி அருவியிலும் நீர் கொட்டி வருகிறது. மூல வைகை வறண்டு கிடந்ததால் வருசநாடு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது நீராட்டம் உள்ளதால் உறைகிணறுகளில் நீர்சுரப்பு அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "மூல வைகையே இப்பகுதி குடிநீருக்கும், நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கும் முக்கிய ஆதாரம். மூல வைகை வறண்டதால் கடந்த சில வாரங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. தற்போது மூல வகையில் நீரோட்டம் இருப்பதால் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in