

ராமேசுவரம்: தமிழகத்தின் தென்கோடியில் உள்ளராமேசுவரம் தீவில் சிறு படகு உரிமையாளரின் மகனாக 1931-ம் ஆண்டு அக்.15-ம் நாள் பிறந்தார் அப்துல் கலாம். அவரின் முழு பெயர் ஆவுல் பக்கீர் ஜலாலுதீன் அப்துல் கலாம். கலாமுடன் உடன் பிறந்த சகோதரர்கள் 3 பேர். ஒரு சகோதரி.
1958-ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக சேர்ந்தார். பின்னர் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பணியாற்றினார். அப்துல் கலாம், 1980-ம் ஆண்டு எஸ்எல்வி. ராக்கெட் திட்டப் பணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதே ஆண்டில் ரோகிணிசெயற்கைக்கோளும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அப்துல் கலாம் தலைமையில் நடைபெற்ற பிருத்வி, அக்னி, ஆகாஷ், நாக், திரிசூல் ஆகிய 5 ஏவுகணைகள் தயாரிக்கும் பணிகள் வெற்றிபெற்றன. அவரது தொடர்ச்சியான சாதனைகளால் இந்தியாவின் ‘ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்பட்டார். அவரது சாதனையின் உச்சமாக1998-ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
2002 ஜூலை 25-ல் நாட்டின் 11-வதுகுடியரசுத் தலைவராக பதவியேற்றார். அதை்தொடர்ந்து நாடு முழுவதும் பயணம் செய்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். இளைஞர்களைக் கனவு காணுங்கள் என அறிவுறுத்திய கலாம், தனது சொந்த ஊரான ராமேசுவரத்தில் ஒரு உயர்கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என ‘அக்னிசிறகுகள்’ புத்தகத்தில் கூறியுள்ளார். அவரது வாழ்நாளில் அந்த கனவு நிறைவேறவில்லை.
கலாம் மறைந்த பிறகு அவரது பெயரிலேயே ராமேசுவரத்தில் கல்லூரியை உருவாக்க சட்டப்பேரவையின் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதே கல்வி ஆண்டில் ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பல்நோக்கு புகலிட கட்டிடத்தில் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது 4 பாடப்பிரிவுகளில் 350 மாணவர்கள் படிக்கின்றனர்.
கல்லூரி தொடங்கி 5 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரைகல்லூரிக்கான சொந்த கட்டிடம்கட்டப்படவில்லை. ராமேசுவரத்தில் 8 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.13.5 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ராமேசுவரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கலாமுக்கு விருப்பமான விண்வெளி அறிவியல் உள்ளிட்ட அறிவியல் பாடப்பிரிவுகளும், மீன்வளம் சார்ந்த பாடப்பிரிவுகளும் இக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, பல்நோக்கு கல்லூரி வளாகமாக்கப்படும் என, கல்லூரி பற்றிய அறிவிப்பை வெளியிட்டபோது தமிழகஅரசு தெரிவித்தது. அதை விரைவில்செயல்படுத்த மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.