Published : 15 Oct 2024 05:39 AM
Last Updated : 15 Oct 2024 05:39 AM

பட்டாசு விற்பனை செய்வதற்கான உரிமத்தை விரைவாக வழங்க வேண்டும்: முதல்வர், வருவாய் துறை அமைச்சரிடம் விக்கிரமராஜா மனு

சென்னை: தீபாவளிப் பண்டிகைக் காலம் நெருங்குவதால் பட்டாசு வணிகத்தை முறைப்படுத்தி, உரிமங்களை விரைந்து வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரிடம் விக்கிரமராஜா நேற்று மனு அளித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, முதல்வர் ஸ்டாலின், வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை நேற்று சந்தித்து பட்டாசு வணிகம் தொடர்பாக மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்ற தலையீடு மற்றும் சிலரது நடவடிக்கை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுதயாரிப்பாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 15 ஆயிரம் வணிகர்கள் மொத்த மற்றும் சில்லறை பட்டாசுக் கடைஉரிமம் பெற்று பட்டாசு வணிகம் மேற்கொள்கின்றனர். சுமார் 70 ஆயிரம் பேர் நேரடி மற்றும் மறைமுகமாக பண்டிகை கால தற்காலிக வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் 1100 பட்டாசுத் தொழிற்சாலைகளும், 2300 பட்டாசுக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இது மிகப்பெரிய வேலைவாய்ப்பையும், தமிழக அரசுக்கு வருவாய் அளிக்கும் தொழிலாகவும் உள்ளது.

பட்டாசு கடை உரிமம் பெறஆன்லைனில் விண்ணப்பிக்க நிர்பந்திக்கப்படுகிறது. நேரடியாக விண்ணப்பம் அளிக்கும் முறையைசெயல்படுத்த பரிசீலிக்க வேண்டும். காலி இடங்களில் சட்டத்துக்கு உட்பட்ட தற்காலிக கொட்டகை வசதி அமைக்கவும் அனுமதிக்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பட்டாசு கடை உரிமத்தை விரைந்து வழங்கவேண்டும். நிரந்தர லைசென்ஸ் புதுப்பிப்பது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான கொள்கையை கொண்டுவர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x