Published : 15 Oct 2024 06:15 AM
Last Updated : 15 Oct 2024 06:15 AM

ஓட்டல் கண்காணிப்பாளர் கொலை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதியாதது ஏன்? - போலீஸ் விளக்கமளிக்க தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு

சென்னை: பல்லாவரத்தில் ஓட்டல் கண்காணிப்பாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என போலீஸ் அதிகாரிவிளக்கம் அளிக்க தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண் (30). இவர் சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில், பிரபல தனியார் ஓட்டல் ஒன்றில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச்12-ம் தேதி ஓட்டலுக்கு வந்த அனகாபுத்தூரை சேர்ந்த சங்கர் (55) மற்றும் அவரது மகன் அருண்குமார் (30) ஆகியோர் பார்சல் சாப்பாடு வாங்கியுள்ளனர். பின்னர் கூடுதலாக ஒரு சாம்பார் பாக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு அருண் தர மறுத்துள்ளார்.

இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆத்திரம் அடைந்த தந்தை, மகன் இருவரும் சரமாரியாக கண்காணிப்பாளர் அருணை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் அருண் உயிரிழந்தார். இதுகுறித்து பல்லாவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தந்தை-மகன் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் உயிரிழந்த அருணின் மனைவி பவித்ரா, சென்னையில் உள்ள தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில், “ஒரே ஓட்டலில் வேலைபார்த்து வந்த நானும், அருணும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். தற்போது நான் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளேன். நாங்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். ஏற்கெனவே எனது கணவர் அருணுடன் தகராறில் ஈடுபட்ட சங்கர் மற்றும் அவரது மகன், எனது கணவரின் சாதி குறித்து கேட்டறிந்து அவரை சாதியை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்தனர்.

எனவே, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன், “இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு சேர்க்காதது தெரியவருகிறது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி விளக்கம் அளிக்க கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

எனவே, இது தொடர்பாக உதவி போலீஸ் கமிஷனர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி வரும் 17-ம்தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை தாம்பரம் காவல் ஆணையர் எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x