

சென்னை: சாம்சங் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, சிஐடியு சங்கத்தினர் மற்றும் ஊழியர்களுடன் 4 அமைச்சர்கள் கொண்ட குழு நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 36-வதுநாளாக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை பேச்சுவார்த்தை நடத்திபோராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், சிறு குறு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர்சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன், மாநில செயலாளர் முத்துகுமார் மற்றும் சாம்சங் நிறுவன ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாலை 6.30 மணிக்கு தொடங்கிய பேச்சு வார்த்தைஇரவு 9 மணியை கடந்தும் நீடித்தது. இந்நிலையில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த்போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``சாம்சங் தொழிலாளர்களுக்கு தேமுதிக எப்போதும் ஆதரவாக இருக்கும்.
தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையே சங்கம் அமைத்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச விரும்புவதுதான். ஆனால் அரசும் சாம்சங் நிறுவனமும் சங்கம் அமைப்பதற்கு செவிசாய்க்காமல் உள்ளன. ஜனநாயக நாட்டில் முதல் ஆணி வேரே தொழிலாளர்கள்தான். புரட்சியாளர் ஸ்டாலின் பெயரை வைத்துள்ள முதல்வர் தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்குவதை வேடிக்கை பார்ப்பது எந்த வகையில் சரியானது'' என்றார்.