Published : 29 Jun 2018 07:41 AM
Last Updated : 29 Jun 2018 07:41 AM

43 ஆயிரம் தெற்கு ரயில்வே ஊழியர்களை உறுப்பினர்களாக கொண்ட தொழிலாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு புகார்: சிபிஐ பார்வைக்கு ரயில்வே வாரியம் கடிதம் அனுப்பியது

ரயில்வே தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் விவகாரத்தை முழுமையாக விசாரிக்க ரயில்வே வாரியம் சிபிஐயின் பார்வைக்கு அனுப்பியுள்ளது. இது தெற்கு ரயில்வே அதிகாரிகள், தொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தெற்கு ரயில்வேயின் தொழிலாளர் கூட்டுறவு கடன் சங்கம் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் கிளைகள் தாம்பரம், கோயம்புத்தூர், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ளன. மொத்தம் 43 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட இச்சங்கத்தில், 19 இயக்குநர்களை தேர்ந்தெடுக்க 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர்.

தெற்கு ரயில்வேயில் பணியில் சேரும் தொழிலாளர்கள், ஊழியர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சங்க உறுப்பினர்களாக சேர்ந்து மாதந்தோறும் ரூ.500 முதல் ரூ.1,500 வரை சேமிப்பாக செலுத்துவர். இந்தப் பணத்தை கொண்டு தேவையானவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதேபோல, தொழிலாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும்போது, சேமிப்புக்கு ஏற்றவாறு வட்டியுடன் சேர்த்து முழுத் தொகையும் வழங்கப்படும்.

இந்நிலையில், எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண்ணையா, திருச்சி கோட்ட செயலாளர் எஸ்.வீரசேகரன் இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும், திருச்சி ரயில்வே கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும் ரயில்வே வாரியத்துக்கு பல புகார்கள் வந்தன. அந்தப் புகார்களை ரயில்வே வாரிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினர். இதன்பேரில், பிரதமர் அலுவலகம் தலையிட்டு ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டது.

என்.கண்ணையா அகில இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு செயல் தலைவராக இருப்பதால், இந்த புகார்களை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கருத்து கூறப்பட்டது. இதையடுத்து ரயில்வே வாரியம் சிபிஐ பார்வைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தை சிபிஐ இயக்குநருக்கும், விவசாய மற்றும் கூட்டுறவு அமைச்சக இணை செயலாளருக்கும் ரயில்வே லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை இயக்குநர் ஆர்.டி.ராம், கடந்த 13-ம் தேதி அனுப்பியுள்ளார். இது ரயில்வே தொழிலாளர்கள், அலுவலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ரூ.1,500 கோடி முறைகேடு?

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயு) துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறும்போது, ‘‘ரயில்வே கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளது குறித்து 7 ஆண்டுகளுக்கு முன்பு 200-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஆதாரத்துடன் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் புகார் அளித்தோம். அதன்பிறகு, திருச்சி கூட்டுறவு சங்கம் சார்பாக மத்திய கூட்டுறவு பதிவாளருக்கு புகார் அளித்தோம். திருச்சியில் மட்டுமல்ல, சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கத்திலும் முறைகேடு நடந்துள்ளது. புதியதாக ஆட்கள் நியமனம், வரவு - செலவு கணக்கில் மோசடி நடந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் மேற்கண்ட 2 கூட்டுறவு கடன் சங்கங்களிலும் ரூ.1,500 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. தற்போது, இந்த புகார்கள் சிபிஐயின் பார்வைக்கு சென்றுள்ளது. எனவே, இது தொடர்பாக சிபிஐ முழுமையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

வெளிப்படையான தேர்தல் இல்லை

எஸ்ஆர்இஎஸ் ரயில்வே சங்க பொதுசெயலாளர் பி.எஸ்.சூரியபிரகாசம் கூறியதாவது:

ரயில்வே துறையின்கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு பிரிவுகளில் முறைகேடுகள் நடந்து வருவதாக ஆதாரத்துடன் நாங்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தோம். ரயில்வே தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது. சில புகார்கள் குறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது, மிகவும் தாமதமாகவே ரயில்வே வாரியம் சிபிஐயின் பார்வைக்கு அனுப்பியுள்ளது. எஸ்ஆர்எம்யு என்.கண்ணையா ரயில்வேயில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு சென்றார். ரயில்வேயில் பணியில் இருப்பவர்தான் கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினராக இருக்க முடியும். சங்கத்தின் உறுப்பினரான பிறகுதான் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு தலைவராக முடியும் என ரயில்வே கூட்டுறவு சட்டம் சொல்கிறது. ஆனால், அவர்களுக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்றிக்கொண்டு, தற்போது சென்னை ரயில் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த 18 ஆண்டுகளாக வெளிப்படையாக தேர்தல் நடக்கவே இல்லை. ரயில்வே கூட்டுறவு சங்கங்களில் நடந்துள்ள முறைகேடுகளை முழுமையாக சிபிஐ விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்ஆர்எம்யு குற்றச்சாட்டு

இது தொடர்பாக எஸ்ஆர்எம்யு மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

ஓய்வுபெற்ற ரயில்வே அலுவலர் ஒருவர் எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பியுள்ளார். இந்த புகாரை வழக்கம்போல சிபிஐயின் பார்வைக்கு வாரியம் அனுப்பியுள்ளது. திருச்சி தொழிலாளர் கூட்டுறவு கடன் சங்கத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கின்றனர்.

திருச்சி தொழிலாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில் இதுவரை மொத்தம் ரூ.350 கோடி முதல் ரூ.400 கோடி வரைதான் கடன் வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, எப்படி ரூ.1,500 கோடிக்கு முறைகேடு செய்ய முடியும்? இந்த சங்கம் தனி அமைப்பாக செயல்படுகிறது. இதற்கும், எஸ்ஆர்எம்யு கண்ணையாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதில் அவர் உறுப்பினராகவே இல்லை. எங்களை வைத்து சிலர் விளம்பரம் செய்து கொள்கின்றனர். இந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பு இல்லை. வீண் வதந்திகள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எஸ்ஆர்எம்யு-வும், கண்ணையாவும்

அகில இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக எஸ்ஆர்எம்யு கடந்த 1968-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திராவின் ஒரு பகுதியில் இணைந்த அமைப்பாக இது செயல்படுகிறது. இதில், 85 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ரயில்வே துறையில் எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கம் முக்கியமானதாக இருக்கிறது. எஸ்ஆர்எம்யு-வில் என்.கண்ணையா கடந்த 1988 முதல் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த 2002-ம் ஆண்டு முதல் எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2007 மற்றும் 2013-ம் ஆண்டு நடந்த தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் எஸ்ஆர்எம்யு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அகில இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு செயல் தலைலராகவும் என்.கண்ணையா இருக்கிறார். இதில், 13.5 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ரயில்வே தொழிலாளர்களுக்கான சம்பள கமிஷனில், எஸ்ஆர்எம்யுவின் பங்களிப்பு முக்கியமானது. குறிப்பாக, 5, 6, 7-வது சம்பள கமிஷனில் சம்பள உயர்வு, பதவி உயர்வுக்காக எஸ்ஆர்எம்யு பல்வேறு போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x