

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கிண்டி, அண்ணா சாலை, கோடம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை விடாமல் பெய்து வருகிறது.
‘தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அது வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும் என்றும் இதன் காரணமாக, அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து வரும் புதன்கிழமை வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும், என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களும் அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சென்னையின் பெரும்பாலான இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், கோடம்பாக்கம், சூளைமேடு, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, ஆவடி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விடாமல் பெய்துவருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இன்று இரவு தொடங்கி காலை வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.