புதுச்சேரியில் கோயில் சொத்துகளை ஆன்லைனில் வெளியிடும் பணி மந்தம் - காரணம் என்ன?

புதுச்சேரியில் கோயில் சொத்துகளை ஆன்லைனில் வெளியிடும் பணி மந்தம் - காரணம் என்ன?
Updated on
2 min read

புதுச்சேரி: ஆளுநர் தொடக்கி வைத்து இரண்டு ஆண்டுகளாகியும் புதுச்சேரியில் கோயில் சொத்துகளை ஆன்லைனில் வெளியிடும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, கோயில் சொத்துகள் அபகரிக்கப்படுவதை தடுக்க கோயில் சொத்துகளின் வழிகாட்டி மதிப்பை பூஜ்ஜியமாக அரசு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

புதுச்சேரியை வெறும் கேளிக்கை சுற்றுலாவுக்கான இடம் என்ற எண்ணமே பலருக்குண்டு. ஆனால், வேதபுரி என்ற முந்தைய பெயருடைய புதுச்சேரியில் கோயில்கள், சித்தர் ஆலயங்கள், மடங்கள் ஏராளம் உள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 243 கோயில்கள் மற்றும் மடங்கள் உள்ளன. இக்கோயில்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிட இந்து சமய அறநிலையத் துறை நிறுவப்பட்டுள்ளது.

இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 1972 மற்றும் விதிகள் 1975-ல் அளித்துள்ள அதிகாரத்தின்படி அறங்காவலர் குழுக்கள், சிறப்பு அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் இத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களை நிர்வகித்து வருகின்றனர். புதுச்சேரியிலுள்ள நான்கு பிராந்தியங்களில மாஹேயில் மட்டும் இந்து சமய அறநிலையத்துறை கோயில் இல்லை. இதர பிராந்தியங்களில் உள்ளன.

புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் குறித்த முழு விவரங்களை பக்தர்கள் அறிய, ‘ஒருங்கிணைந்த கோயில்கள் மேலாண்மை அமைப்பு’ என்ற ‘ஆன்லைன் போர்ட்டல்’ உருவாக்கப்பட்டது. இதில், கோயில்கள் முகவரி, திருவிழாக்கள், பூஜை விவரம், அவை நடக்கும் நேரம், கோயில்கள் அமைப்பு, வரலாறு, சிறப்பு அம்சங்கள் உள்ளிட்டவை இடம் பெறும் என அறிவிக்கப்பட்டது.

இதைத் தாண்டி, ஒவ்வொரு கோயிலின் அசையும் சொத்து, அசையா சொத்து விவரங்களை திரட்டி ஆன்லைனில் வெளியிடவும் முடிவெடுக்கப் பட்டது. இதற்கான பணிகளை கடந்த 2022-ல் அப்போதைய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த கோயில்கள் மேலாண்மை அமைப்பில், கோயில்களின் விவரங்களை பதிவு செய்ய தொடங்கினர்.

அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி, "புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களின் கடவுள் சிலைகள், தங்கம், வெள்ளி, ஆபரணங்கள் மற்றும் இதர அசையும் சொத்துகள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் திரட்டப்பட்டு, அவை பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், அந்தந்த கோயில்களின் அசையா சொத்துகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும்" என்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையானது, கோயில்களுக்கு சொந்தமான சொத்து விவரங்களை முழுமையாக திரட்டி ஆன்லைன் போர்ட்டலில் இடம் பெறச் செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதனிடையே, காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை போலி பத்திரம் தயார் செய்து அபகரித்த சம்பவம் நடந்தது. இதில் 3 அரசு அதிகாரிகள் உட்பட 17 பேர் கைதானார்கள். இச்சூழலில் சொத்து விவரங்கள் திரட்டும் பணி தற்காலிகமாக நின்றன. ஆளுநர் தொடக்கி வைத்து இரண்டு ஆண்டுகளாகியும் இப்பணி முடியாத நிலையே உள்ளது.

தற்போது புதுச்சேரி மட்டுமில்லாமல் காரைக்காலிலும் கோயில் நிலம் மோசடியாக விற்கப்பட்டுள்ளது. காரைக்கால் கோவில்பத்து ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு முதல் கட்டவிசாரணை அடிப்படையில் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன், நில அளவையர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் கைதாகியுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. பல கோடி ரூபாய் கோயில் நிலமோசடி விவகாரம் புதுச்சேரி அரசுக்கு பெரும் களங்கத்தை உருவாக்கியுள்ளது. இதனால் ஆளுநர் கைலாஷ் நாதன் இவ்விவகாரத்தை நேரடியாக கண்காணிக்க தொடங்கியுள்ளார்.

இதுபற்றி பக்தர்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் கோயில் சொத்துகள் அபகரிப்பு அதிகரித்துள்ளது. சில கோயில்கள் விவகாரம் மட்டுமே வெளியே தெரிகிறது. கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பை தடுக்கவும் மீட்டு எடுக்கவும், கோயில் நிலங்களின் வழிகாட்டி மதிப்பை பூஜ்ஜியமாக்க அரசு உடன் உத்தரவிடவேண்டும். இதுபோல் நடந்தால் கோயில் நிலங்களை ஆக்கிரமிக்க முடியாது.

இதில் அரசுக்கு என்ன தயக்கம் என தெரியவில்லை. கோயில் சொத்து விவரங்களை டிஜிட்டலாக்க தனிக்குழு அமைத்து ஆன்லைனில் வெளியிட வேண்டும். அதையும் விரைந்து முடிக்க துறைகளை ஒருங்கிணைத்து குழு அமைக்க வேண்டும். தவறு செய்தோரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in