Published : 15 Jun 2018 08:06 AM
Last Updated : 15 Jun 2018 08:06 AM

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பு; மூன்றாவது நீதிபதி விசாரிக்க பரிந்துரை: இடைத்தேர்தல் நடத்த தடை நீடிப்பு

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளது. பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதியும், செல்லாது என்று மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளித்துள்ளனர். இதனால் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரித்து தீர்ப்பளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க.தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கடந்த ஆண்டு ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து தங்க.தமிழ்செல்வன் (ஆண்டிபட்டி), வி.வெற்றிவேல் (பெரம்பூர்), என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), எம்.ரங்கசாமி (தஞ்சாவூர்), ஆர்.முருகன் (அரூர் ), சோ.மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), டாக்டர் கே.கதிர்காமு (பெரியகுளம்), சி.ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), வி.செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), டாக்டர் எஸ்.முத்தையா (பரமக்குடி), மு.கோதண்டபாணி (திருப்போரூர்), டி.ஏ.ஏழுமலை (பூந்தமல்லி), ஆர்.தங்கதுரை (நிலக்கோட்டை), ஆர்.பாலசுப்பிரமணி (ஆம்பூர்), எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்), ஆர்.சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்), கே.உமாமகேஸ்வரி (விளாத்திகுளம்) ஆகிய 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் ப.தனபால் கடந்த 2017 செப்டம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, ‘‘இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை 18 எம்எல்ஏக்களின் தொகுதியை காலியாக அறிவித்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது’’ என கடந்த ஆண்டு செப்டம்பரில் இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

அதன்படி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. 18 எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, துஷ்யந்த் தவே, பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். முதல்வர், பேரவைத் தலைவர், துணை முதல்வர், அரசு தலைமை கொறடா ஆகியோரது சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, ஆர்யமா சுந்தரம், சி.எஸ்.வைத்தியநாதன், சி.திருமாறன், பாபுமுருகவேல் ஆகி யோர் ஆஜராகி வாதிட்டனர்.

மாறுபட்ட தீர்ப்பு

இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி 23-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு நேற்று மதியம் 1.30 மணிக்கு தீர்ப்பளித்தது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை பிறப்பித்தனர்.

தலைமை நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

இந்த விஷயத்தில் பேரவைத் தலைவர் எடுத்த முடிவு நியாயமற்றது எனக் கூறமுடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணைப்படி பேரவைத் தலைவர் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுத்துள்ள முடிவில் நீதிமன்றம் தலையிட்டு, நீதிமன்றம் கூறுவதுதான் சரியெனக் கூற முடியாது. அவ்வாறு தலையிடுவதும் உகந்ததாக இருக்காது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பேரவைத் தலைவரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிடுவதற்கு குறைந்த அளவே வாய்ப்பு உள்ளது. பேரவைத் தலைவர் சட்டத்துக்கு விரோதமாக விபரீதமான, முரண்பாடான முடிவுகளை எடுக்கும்போது மட்டுமே அதில் நீதிமன்றம் தலையிட முடியும். உதாரணமாக, பேரவைத் தலைவரின் அதிகார வரம்பை மீறி செயல்படுதல், இயற்கை நீதிக்கு எதிராக செயல்படுதல், அமலில் உள்ள சட்டத்துக்கு எதிராக செயல்பட்டால் மட்டுமே பேரவைத் தலைவரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும்.

மேலும் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் எடுத்துள்ள முடிவில் நீதிமன்றம் சரியான காரணங்கள் இல்லாமல் தலையிட முடியாது. எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் கிடையாது என ஒட்டுமொத்தமாக மறுக்க முடியாது. எனவே தகுதி நீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

உள்நோக்கம் இருக்கிறது

சக நீதிபதியான எம்.சுந்தர் பிறப்பித்த தீர்ப்பில், ‘‘இந்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் எடுத்த முடிவு இயற்கை நீதிக்கு எதிரானது. உள்நோக்கம் கொண்டது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பேரவைத் தலைவரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிடலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்தது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வராது. 19 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்த நிலையில், அதில் எம்எல்ஏ ஜக்கையனை மட்டும் விட்டுவிட்டு 18 எம்எல்ஏக்களை மட்டும் தகுதி நீக்கம் செய்திருப்பதில் இருந்தே, பேரவைத் தலைவருக்கு உள்நோக்கம் இருப்பது தெளிவாகிறது. மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணைப்படி பேரவைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக மட்டுமேயன்றி, நம்பிக்கையை குலைப்பதற்காக அல்ல. எனவே, 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்’’ என தெரிவித்தார்.

3-வது நீதிபதிக்கு மாற்றம்

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது. மூன்றாவது நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து முடிவு எடுக்க மூத்த நீதிபதியான ஹூலுவாடி ஜி.ரமேஷுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கப்போகும் மூன்றாவது நீதிபதி யார் என்ற விவரம் அடுத்த வாரம் தெரியவரும். அதன்பிறகு மீண்டும் இரு தரப்பிலும் முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு, மூன்றாவது நீதிபதி எந்த தீர்ப்பை சரியெனக் கூறுகிறாரோ அதுவே இறுதித் தீர்ப்பாகும். மேலும், இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி தீர்ப்பளிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x