Published : 14 Jun 2018 12:04 PM
Last Updated : 14 Jun 2018 12:04 PM

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மதியம் 1:00 மணிக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க.தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று மதியம் 1:00 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்தில் மட்டுமின்றி நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க.தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கடந்த ஆண்டு ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் ப.தனபால் கடந்த 2017 செப்டம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, ‘‘மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 எம்எல்ஏ-க்களின் தொகுதியை காலியாக அறிவித்து தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது’’ என இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கும் பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் எழுத்துபூர்வமான இறுதி வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதையடுத்து கடந்த ஜனவரி 23-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி அமர்வு இன்று (ஜூன் 14) மதியம் 1 மணிக்கு வழங்க உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பு

இந்த வழக்கில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என ஒருவேளை நீதிபதிகள் தீர்ப்பு அளித்தால், அது தற்போதைய ஆட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி அணிகள் ஒன்றாக இணைந்து அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டுள்ளன. ஆனாலும் ஆட்சியைத் தக்கவைக்க பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால், ஆர்.கே.நகர் எம்எல்ஏவாக உள்ள டிடிவி தினகரனோடு சேர்ந்து இந்த 18 எம்எல்ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்தால் முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சி கவிழும் சூழல் ஏற்படும்.

ஒருவேளை நீதிபதிகள் தங்களுக்குள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படும். தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தீர்ப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் எழுந்துள்ளது. அதனால், இந்த வழக்கின் தீர்ப்பை அனைத்து கட்சிகளும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளன.

எம்எல்ஏக்கள் யார்?

ஆண்டிபட்டி தங்க.தமிழ்செல்வன், பெரம்பூர் வி.வெற்றிவேல், சோளிங்கர் என்.ஜி.பார்த்திபன், தஞ்சாவூர் எம்.ரங்கசாமி, அரூர் ஆர்.முருகன், மானாமதுரை சோ.மாரியப்பன் கென்னடி, பெரியகுளம் டாக்டர் கே.கதிர்காமு, குடியாத்தம் சி.ஜெயந்தி பத்மநாபன், பாப்பிரெட்டிபட்டி பி.பழனியப்பன், அரவக்குறிச்சி வி.செந்தில்பாலாஜி, பரமக்குடி டாக்டர் எஸ்.முத்தையா, திருப்போரூர் மு.கோதண்டபாணி, பூந்தமல்லி டி.ஏ.ஏழுமலை, நிலக்கோட்டை ஆர்.தங்கதுரை, ஆம்பூர் ஆர்.பாலசுப்பிரமணி, சாத்தூர் எஸ்.ஜி.சுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் ஆர்.சுந்தர்ராஜ், விளாத்திகுளம் கே.உமாமகேஸ்வரி ஆகிய 18 பேர் தகுதி நீக்கத்திற்கு ஆளான எம்எல்ஏக்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x