Published : 27 Jun 2018 01:20 PM
Last Updated : 27 Jun 2018 01:20 PM

இளைஞர்களுக்கு போட்டியாக செயின்பறிப்பில் ஈடுபட்ட முதியவர் பிடிபட்டார்: 10 சவரன் நகை, வாகனம் பறிமுதல்

செயின்பறிப்பில் முதன்முறையாக 50 வயதை கடந்த முதியவர் ஈடுபட்டு இரண்டு பெண்களிடம் செயினை பறித்து தலைமறைவானார். அவரை நேற்று பிடித்த போலீஸார் 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளனர். இது தவிர அவ்வப்போது பலரை கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்களும், சிறுவர்களும் மட்டுமே.

ஆனால் கடந்த 5 நாட்களாக போலீஸார் நடத்தும் கடுமையான வாகன சோதனையையும் மீறி இரண்டு நாட்களுக்கு முன்னர் முதியவர் ஒருவர் இரண்டு மூதாட்டிகளிடம், மோட்டார் சைக்கிளில் வந்து செயின் பறித்துச் சென்றதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு தன் வீட்டருகில் நடந்து வரும்போது மேற்கு கே.கே.நகர், அன்னாஜி நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரின் மனைவி தர்மாம்பாளிடம் (62) நீல நிற இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் ஒருவர் அட்ரஸ் கேட்பதுபோல் அவர் அணிந்திருந்த தாலிச் செயினைப் பறித்துச் சென்றார்.

இதேபோன்று வளசரவாக்கம் வேலன் நகரில் வசிக்கும் லட்சுமி (74) என்பவர் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது அவரருகில் வந்த அதே நபர் அவரிடம் முகவரி கேட்பது போல் கேட்டு திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார்.

இரண்டு சம்பவங்கள் குறித்தும் புகார் அளித்த இருவரும் கூறிய தகவல் ஒரே மாதிரியாக இருந்தது. நீல நிற ஸ்கூட்டர் போன்ற வாகனம், வேட்டி சட்டை அணிந்திருந்தார், வயதானவர், ஹெல்மட் போடவில்லை என்று கூறியிருந்தனர். வயதானவர் என்பதை போலீஸார் நம்பவில்லை. pஒதுவாக செயின் பறிப்புகள், செல்போன் பறிப்புகளில் இளைஞர்கள், இளம் சிறுவர்கள் ஈடுபடுவதை பார்த்துள்ள போலீஸார் வயதானவர் செயின் பறித்துச் சென்றார் எனபதை கேட்டு உள்ளுக்குள் சிரித்தாலும் போலீஸுக்கு சவால் விடும் அவரை பிடிக்க முடிவு செய்தனர்.

செயின் பறிப்பு நடந்த இடங்களில் கிடைத்த சிசிடிவி பதிவுகளை போலீஸார் எடுத்து ஆய்வு செய்தபோது இரண்டிலும் சுமார் 55 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க முதியவர் செயினைப் பறிப்பது பதிவாகி இருந்தது. புது யமஹா பேசினோ ஸ்கூட்டரில் அவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த வாகனம் ஆந்திர மாநில ரிஜிஸ்ட்ரேஷன் கொண்டது தெரியவந்தது.

சிசிடிவி பதிவில் சிக்கிய அவரை போலீஸார் தேடி வந்த நிலையில் ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணை வைத்து வாகனத்தை தேடி வந்த தனிப்படை போலீஸார் வண்ணாரபேட்டை அருகே அவரை மடக்கி பிடித்தனர். தலை மொட்டை அடித்து வித்யாசமாக மாறுவேசத்தில் இருந்த அவரை பிடித்தவுடன் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

போலீஸார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் சீனு(எ) சீனுவாசன்(எ) பர்மா சீனு என்பது தெரியவந்தது. பழைய குற்றவாளியான அவர் மீது வண்ணாரப்பேட்டையில் பல வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. சின்ன சேலத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்த அவர் தற்போது முதன் முறையாக செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அவர் தலையை மொட்டை அடித்து வித்யாசமாக டி சர்ட் எல்லாம் போட்டு இருப்பதை பார்த்த போலீஸா, ஏன் தலையை மொட்டை அடித்துள்ளாய் என்று கேட்டதற்கு, சார் நீங்கள் மாறுவேடம் போட்டு குற்றவாளிகளை பிடிக்கிறீர்கள், அதே போல் போலீஸில் சிக்காமல் இருக்க நான் மொட்டை அடித்து மாறுவேடத்தில் திரிந்தேன் என்று கூறியுள்ளார்.

ஏன் திடீரென செயின் பறிப்பில் இறங்கினாய் என்று கேட்டபோது வயசாயிடுச்சு முன்பு போல் சுவரேறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்து திருடுவதற்கு முடியவில்லை, ஆனால் சின்ன பசங்க எல்லாம் செயின் பறித்து வசதியாக வாழ்வதை பார்த்து சரி செயின் பறித்து வாழலாம் என்று முடிவு செய்து ஒரு இரு சக்கர வாகனம் வாங்கி புதிய தொழிலில் இறங்கினேன் என்று கூறியுள்ளார்.

முதலில் வயதான பெண்களிடம் ட்ரையல் பார்க்கலாம் என்று ஏரியா விட்டு ஏரியா வந்து கவனமாக திட்டம் போட்டு செயின் பறித்தேன், ஆனால் சிசிடிவி காட்டி கொடுத்துவிட்டது என்று கூறியுள்ளார். அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 10 சவரன் நகைகளை கைப்பற்றியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x