Published : 19 Jun 2018 11:35 AM
Last Updated : 19 Jun 2018 11:35 AM

பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரிடம் விசாரணை

சேலத்தில் பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் எட்டு வழி பசுமை சாலை 277 கிமீ தொலைவுக்கு அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தின் எல்லையான மஞ்சவாடிகணவாய் பகுதியில் எல்லைக்கல் (முட்டுக்கல்) நடும் பணியில் நேற்று வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அடிமலைபுதூர் பகுதியில் விவசாயி தாமரைக்கண்ணன் என்பவரின் நிலத்தில் முட்டுக்கல் நடும் பணியில் வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வெங்கடேசன் தலைமையில் வருவாய் துறையினர் ஈடுபட்டனர். மேலும், காவல் உதவி ஆணையர்கள் பிரேம்ஆனந்த், ராஜகாளீஸ்வரன் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

‘ஜூலை 10-ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடக்கவுள்ள நிலையில் முன் கூட்டியே அளவீடு பணிகள் தொடங்கி முட்டுக்கல் நடும்பணிக்கு அனுமதிக்க மாட்டோம்’ என விவசாயி தாமரைகண்ணன் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பணியை பாதியில் நிறுத்திவிட்டு அதிகாரிகள் சென்றனர்.

இதேபோல ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர் ஆகிய இடங்களில் முட்டுக்கல் நடும் பணி நடந்தது. அப்போது அடிமலைபுதூரில் உண்ணாமலை என்பவரது நிலத்தை அளவீடு செய்தபோது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாமலை நிலத்தில் உருண்டு புரண்டு அழுதார். இதனால், பணியில் இடையூறு ஏற்பட்டது.

இதனால், உண்ணாமலை, அவரது மகன் ரவிச்சந்திரன், மருமகள் சுதா மற்றும் சகுந்தலா, பிரகாஷ், நடராஜ் ஆகிய 8 பேரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அங்கு தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர், அப்பகுதியில் அளவீடு பணிகள் நடந்தது.

இதுகுறித்து விசாரித்தபோது, பணிகள் தடையின்றி நடக்க வசதியாக உண்ணாமலை குடும்பத்தினரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றதாகவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும் திட்டம் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x