வடகிழக்கு பருவமழை - அனைத்து துறை அதிகாரிகள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

வடகிழக்குப் பருவமழை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.14) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை முதல்வர் ஆய்வு செய்தார்.

தென் கிழக்கு வங்கக்கடலில் இன்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் கணித்துள்ளது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை டிஜிபி, சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். துறைச் செயலாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு செய்தார்.

மழைநீர் வடிகால் பணிகள், தூர்வாரும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in