Published : 01 Jun 2018 09:59 AM
Last Updated : 01 Jun 2018 09:59 AM

மெட்ரோ ரயிலில் பயணிகள் வருகை குறைவு: கட்டணத்தை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை

புதியதாக தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தில் கட்டணம் வசூலிக்கும் முறை நேற்று தொடங்கியது. எனினும், பயணிகள் வருகை குறைவாக இருந்தது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் தற்போது 35 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மக்களிடம் மெட்ரோ ரயில் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்ட்ரல் - விமான நிலையம், சின்னமலை - டிஎம்எஸ் இடையே கடந்த 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையில் இலவச பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், மெட்ரோ ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மொத்தம் 6 லட்சத்து 41 ஆயிரத்து 524 பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் முறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், பெரிய அளவில் பயணிகள் கூட்டம் இல்லாமல் இருந்தது. இருப்பினும், ஓரளவுக்கு மக்கள் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். பயணக் கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அரசு தலையிட வேண்டும்

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘கடந்த 5 நாட்களாக இலவச பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டதால், மக்கள் கூட்டம் எப்போ தும் அதிகமாக இருந்தது. கட்டண வசூல் முறை தொடங்கியுள்ளதால், கூட்டம் குறைந்துள்ளது. எனவே, அதிக அளவில் மக்கள் பயணம் செய்யும் வகையில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். இதில், தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

ட்டணம் குறைக்கப்படுமா?

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் நரசிம்ம பிரசாத் நேற்று கூறும்போது, ‘‘புதிய வழித் தடங்களில் கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் முறை நேற்று தொடங்கியது. தொடக்க நாள் என்பதால், மக்கள் ஓரளவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையத்தை மெட்ரோ ரயில் சேவை இணைப்பதால், இந்த எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும்.

மெட்ரோ ரயிலில் ஏற்கெனவே பயணிகளின் எண்ணிக்கை சராசரியாக 33 ஆயிரமாக இருந்தது.

தற்போது, சென்ட்ரல் – நேரு பூங்கா, சின்னமலை – டிஎம்எஸ் இடையே தொடங்கியுள்ள புதிய மெட்ரோ ரயில்சேவையில் (மே 30-ம் தேதி முதல்) கட்டண முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, பயணிகள் எண்ணிக்கை 55,640 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், குழுவாகச் சென்றால் 20 சதவீதம், வாராந்திர, மாதாந்திர அட்டை வாங்கினால் 20 சதவீதம், பயண அட்டை வாங்கினால் 10 சதவீதம் என தற்போதுள்ள கட்டணச் சலுகையை மக்களிடம் எடுத்துரைப்போம். கட்டணம் குறைப்பது குறித்து நாங்கள் தலையிட முடியாது. இதற்கென தனி ஆணையம் இருக்கிறது. அந்த ஆணையம்தான் முடிவு செய்து அறிவிக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x