ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 19,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவியில் குளிக்க தடை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு6,000 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருவதால், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று பிற்பகலில் விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 19,000 கனஅடியாக அதிகரித்தது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. ஆனால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சிலர், ஆற்றில் பாதுகாப்பான பகுதிகளில் குளித்தனர்.

மேட்டூர் அணைக்கு... பருவமழை காரணமாக டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த 11-ம் தேதி காலை 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் திறப்பு, நேற்று மாலை 7ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 89.26 அடியாக சரிந்துள்ள நிலையில், 16 கண் மதகு பகுதியில் காட்சியளிக்கும் பாறைகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 89.26 அடியாக சரிந்துள்ள நிலையில், 16 கண் மதகு பகுதியில் காட்சியளிக்கும் பாறைகள்

அதேபோல, கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கான நீர்திறப்பு நேற்று முதல்விநாடிக்கு 700 கனஅடியில் இருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து விநாடிக்கு 6,445 கனஅடியாக இருந்தது. அணைநீர்மட்டம் 89.26 அடியாகவும், நீர் இருப்பு 51.81 டிஎம்சியாகவும் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in