

சென்னை: பாக்மதி விரைவு ரயில் விபத்தை தொடர்ந்து, சென்னை – திருப்பதி உட்பட 18 விரைவு ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது. மேலும், 20-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.
கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு புறப்பட்ட பாக்மதி விரைவு ரயில், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு சரக்குரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால், அந்த தடத்தில் செல்ல வேண்டிய ரயில்களின் சேவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது.
திருப்பதி – புதுச்சேரிக்கு காலை 4 பணிக்கு புறப்பட வேண்டிய ரயில், புதுச்சேரி – திருப்பதிக்கு மாலை 3 புறப்பட வேண்டிய ரயில், திருப்பதி – சென்னை சென்ட்ரலுக்கு காலை 6:25 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், சென்னை சென்ட்ரல் – திருப்பதிக்கு மாலை 4:35 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், அரக்கோணம் – புதுச்சேரிக்கு காலை7:10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், அரக்கோணம் – கடப்பாவுக்கு மதியம் 2:30 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், அரக்கோணம் – திருப்பதிக்கு காலை9:15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், சென்னை சென்ட்ரல் – ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு புறப்பட வேண்டிய பினாகினி விரைவு ரயில் உட்பட 18 ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டன
எழும்பூர் – ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர், சென்ட்ரல் – தெலங்கானா மாநிலம் ஐதராபாத், செங்கல்பட்டு – ஆந்திர மாநிலம் காக்கிநாடா போர்ட், எழும்பூர் – புதுடெல்லி ஜி.டி., விரைவு ரயில், தாம்பரம் - ஐதராபாத்துக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - ஹவுராவுக்கு புறப்பட வேண்டிய மெயில், சென்னை சென்ட்ரல் - புதுடெல்லிக்கு புறப்பட வேண்டிய தமிழ்நாடு விரைவு ரயில் உட்பட 20-க்கும்மேற்பட்ட விரைவு ரயில்கள் மாற்றுப் பாதையாக அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழியாக இயக்கப்பட்டன.
சென்ட்ரலில் பயணிகள் கூட்டம்: ரயில்களின் சேவை ரத்து, மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள், அது குறித்த தகவல்களை அறிந்து கொள்ள, உதவி மையத்தை அணுகினர். இதனால், அங்கு கூட்டம் அலைமோதியது. உதவிமையங்களில் குறைந்த அளவிலேயே பணியாளர்கள் இருந்ததால் பயணிகள் தகவல்களை உடனடியாக பெற முடியாமல் அவதிப்பட்டனர்.
இன்று வழக்கம்போல் இயக்கம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கூறும்போது, ‘‘விபத்து நடந்த இடத்தில் ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் 300-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை முதல் இந்த தடத்தில் ரயில்கள் வழக்கம்போல இயக்க நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.