Published : 20 Jun 2018 07:46 AM
Last Updated : 20 Jun 2018 07:46 AM

லாரிகள் வேலைநிறுத்தம் ஜூலை 20-ல் தான் தொடக்கம்; லாரி உரிமையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி- தமிழ்நாடு மாநில சம்மேளனத் தலைவர் குற்றச்சாட்டு

லாரி உரிமையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இப்போது வேலைநிறுத்தம் நடைபெறுவதை போன்ற தோற்றத்தை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தெரிவித்தார்.

நாமக்கல்லில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டீசல் விலை, காப்பீடு, சுங்க கட்டண உயர்வைக் கண்டித்து ஜூலை 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அனைத்திந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு லாரி உரிமையாளர்கள் ஒற்றுமையை குலைக்கும் வகையில் சிலர் சதி வேலைகளில் ஈடுபட்டு லாரிகள் வேலைநிறுத்தம் கடந்த 18-ம் தேதி முதல் நடைபெற்று வருவதாகக் கூறி வருகின்றனர். இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றும் செயல், தமிழகத்தில் வழக்கம்போல் அனைத்து லாரிகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவும், லாரி உரிமையாளர்களின் ஒற்றுமையை குலைக்கும் விதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து சம்மேளன பொதுக்குழு, செயற்குழுவில் முடிவு செய்வோம். ஜூலை 20-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தம் குறித்து அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் அரசு தரப்பில் எங்களை இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

விபத்து குறைவு

கடந்த 2016-2017-ம் ஆண்டு லாரிகளால் ஏற்பட்ட விபத்து 14 சதவீதமாக இருந்தது. ஆனால் 2017-2018-ல் விபத்து 4 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் காப்பீடு நிறுவனங்கள், லாரிகள் மூலம் அதிக விபத்துகள் ஏற்படுவதாக தவறான தகவலை தெரிவித்து, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. காப்பீடு கட்டணத்தை ஆண்டுக்கு 5 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ளலாம் என்பதே எங்களின் நிலைப்பாடு.

அனைத்திந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்தபடி லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜூலை 20 முதல் நடைபெறும். இப்போராட்டத்தில் தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் பங்கேற்கும் என்றார். அப்பபோது சம்மேளன பொதுச்செயலர் தன்ராஜ், பொருளாளர் சீரங்கன், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.வாங்கிலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x