ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதவர் முரசொலி செல்வம்: திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கம்

ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதவர் முரசொலி செல்வம்: திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கம்
Updated on
1 min read

சென்னை: முரசொலி செல்வத்தின் மறைவையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:

அண்ணன் முரசொலி செல்வம் எனும் கழகத்தின் கொள்கைச் செல்வத்தை இழந்துவிட்டோம். அவரை இயற்கையிடம் பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கிறோம்.நம்மை நாமே தேற்றிக்கொள்ளவேண்டிய வேதனை நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம்.

முரசொலி செல்வத்துக்கு, அண்ணாவிடம் நிறைய பற்று உண்டு. அண்ணாவை அவர் அடிக்கடி சந்தித்துப் பேசுவதும் உண்டு. அண்ணா சொன்ன செய்திகளை - வரலாற்றுத் தகவல்களை என்னிடம் பகிர்ந்துகொள்வார். அது போலதலைவர் கருணாநிதியிடம் பேசியதையும் பகிர்ந்துகொண்டு இயக்கத்தை மேலும் வலுப்படுத்த ஆலோசனை வழங்குவார்.

அமைதியாகத் தோற்றமளித்தாலும் ஆழத்திலிருந்து பீறிட்டு அடிக்கும் நெருப்புக் குழம்பைக் கக்கும் எரிமலை அவருடைய எழுத்துகள். அவருடைய கைவண்ணத்தில் உருவான சின்ன பெட்டிச் செய்திகூட ‘அக்கினிக் குஞ்சு’ போலஅதிகாரக் காடுகளைப் பற்றவைத்து - பதற வைத்திருக்கிறது. ‘சிலந்தி’ என்ற பெயரில் முரசொலியில் அவர்பின்னிய எழுத்துவலையில் சிக்காதஅரசியல் எதிரிகள் இல்லை.

எவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்காமல், அவர்களின் கொள்கை முரண்களைக் கூர்மையான வாதங்களுடனும், யாரை விமர்சிக்கிறாரோ அவர்களேகூட ரசிக்கும் வகையிலான நையாண்டி நடையிலும் அண்ணன் செல்வம்எழுதிய கட்டுரைகள், அரசியல்இயக்கங்களில் உள்ளவர்களுக்கும், ஊடகத் துறையில் இருப்போருக்கும் வழிகாட்டிகளாகும்.

கொள்கை ரீதியான எதிர்ப்புகளுடன் ஒருபோதும் சமரசம் ஆகாதவர். அரசியல் கடந்து அனைவரிடமும் அன்புடன் பழகக்கூடியவர். அதிகாரப் பதவிகள் மீது எந்தவித நாட்டமும் இல்லாமல், அரசியல் விளம்பரங்களுக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அத்தனை பணிகளையும் பொறுப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றிய பேராற்றல் மிக்கவர்.

அவரின் மரணத்தை ஒரு கட்சிக்கோ குடும்பத்துக்கோ ஏற்பட்ட இழப்பாகக் கருதாமல், துயரத்தில் துணைநின்று ஆறுதல் தெரிவித்த தோழமைக் கட்சியின் தலைவர்கள் - நிர்வாகிகள், அரசியல் எல்லைகளைக் கடந்து நேரடியாகவும் - அறிக்கைகள் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் இரங்கல் தெரிவித்த பண்பாடுமிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி.

அதேபோல், கலையுலக நண்பர்கள், இறுதி நிகழ்வு முடியும்வரை கண்ணீருடன் கைகோத்து நின்ற கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகள், கலைத்துறையினர், பல்வேறு அமைப்பினர், இறுதி ஊர்வலத்தை நேரலை செய்து மூத்த பத்திரிகையாளரான அண்ணன் செல்வத்துக்கு நிறைவான அஞ்சலி செலுத்திய ஊடகத்துறையினர், கண்ணீர்எழுத்துகளை அச்சிட்ட இதழாளர்கள், சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கரம் பற்றி நன்றியை உரித்தாக்குகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in