

சிவகங்கை: ஆதிதிராவிடர் நலத் துறையின் பெயரை மாற்றுவது குறித்து முதல்வர் பரிசீலிப்பார் என்று அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.
விடுதலைப் போராட்ட வீராங்கனை குயிலி நினைவு தினத்தையொட்டி, சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், மா.மதிவேந்தன் மற்றும் எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.மதிவேந்தன் கூறியதாவது: ஆதிதிராவிடர் நலத் துறையின் பெயரை மாற்றுவது குறித்து முதல்வர் பரிசீலிப்பார். ஆதிதிராவிடர் நலத் துறை என்ற பெயரில் இருந்தாலும், அனைத்து பட்டியலின, பழங்குடியின மக்களின் நலனுக்காக துறையும், தமிழக அரசும் செயல்படுகின்றன.
முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, ஆதிதிராவிடர் வீடுகள், மாணவர்கள் விடுதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர்களுக்கான நிதியை முறையாகச் செலவழிக்காமல் திருப்பி அனுப்புவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு நலத் திட்டங்களை விரைவில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.