Published : 16 Jun 2018 09:57 AM
Last Updated : 16 Jun 2018 09:57 AM

பொட்டலப் பொருட்கள் விதிகளின்கீழ், மாதந்தோறும் சிறப்பு ஆய்வுகள்; அதிக விலை, எடை குறைவு குறித்து புகார் அளிக்கலாம்: தொழிலாளர் துறை தகவல்

பொட்டலப் பொருட்கள் மீது சட்டரீதியான அறிவிப்பு இல்லாதது, எடை குறைவு, அதிக விலை குறித்து கைபேசி செயலி மூலம் புகார் அளிக்கலாம் என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின்கீழ், மாதந்தோறும் சிறப்பு ஆய்வுகள் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அலுவலர்களால் நடத்தப்படுகிறது. மாதந்தோறும் முதல் மற்றும் 3-ம் வாரத்தில் இந்த ஆய்வுகள் நடக்கும்,

கடந்த மே மாதம் தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால் அறிவுறுத்தல்படி, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1,330 கடைகளில் ஆய்வு நடத்தியதில், 289 கடைகளில் தவறுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி நோட்டுப் புத்தகங்கள், ஐஸ்கிரீம் விற்கப்படும் இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 856 நிறுவனங்களில், 46-ல் முறைகேடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது போன்ற சிறப்பு ஆய்வுகள் இனி வரும் மாதங்களிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு, தவறுகள் காணப்பட்டால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பொட்டலப் பொருட்கள் மீது சட்டரீதியான அறிவிப்புகள் இல்லாதது, பொருளில் குறிப்பிட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் அதிகமாக விற்பது, அளவு குறைவு போன்ற முரண்பாடுகள் தொடர்பாக தற்போது பயன்பாட்டில் உள்ள ‘TN-LMCTS’ என்ற கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் புகார் அளித்து நுகர்வோர் நிவாரணம் பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x