Published : 25 Jun 2018 12:46 PM
Last Updated : 25 Jun 2018 12:46 PM

ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து பேரவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு; திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயல்பாடுகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 10 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து பேரவை இன்று (திங்கள்கிழமை) மீண்டும் கூடியது.

அப்போது, திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும் வகையில் ஆளுநரின் ஆய்வு உள்ளது. மரபை சுட்டிக்காட்டி ஆளுநர் ஆய்வு குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதற்கு சட்டப்பேரவையில் விதி 92 (7) இன் கீழ் ஆளுநர் குறித்துப் பேச அனுமதி இல்லை என சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதையடுத்து ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “ஆளுநர் பன்வாரிலால் குறித்துப் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் திட்டவட்டமாக மறுத்தார். அதற்கு நான், தமிழக சட்டப்பேரவையில் கடந்த 1995-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி ஆளுநர் சென்னா ரெட்டியைப் பற்றி அப்போது முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது நீண்ட விவாதமே நடத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினேன்.

மேலும், சென்னா ரெட்டி மீது நடவடிக்கை எடுத்து அவரை நீக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதையும் எடுத்துக் கூறினேன். ஆளுநர் பன்வாரிலால் குறித்தும், அவரின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆளுநர் குறித்துப் பேச அனுமதித்தெதெல்லாம் 1995-ல் நடந்த கதை, இப்போது அனுமதிக்க முடியாது என சபாநாயகர் மறுத்துவிட்டார்.

அதனைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். ஆளுநர் செயல்பாடுகளை தடுத்தால் 7 ஆண்டுகள் சிறை செல்லும் வகையிலான வழக்குகள் போடப்படும் என ஆளுநர் மாளிகை மிரட்டல் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக கருப்புகொடி காட்டும் போராட்டத்தை திமுக தொடர்ந்து நடத்தும். ஆண்டு முழுவதும் சிறையிலிருக்க நேர்ந்தாலும் கருணாநிதி, அண்ணா ஆகியோர் வகுத்துக் கொடுத்த மாநில சுயாட்சி கொள்கைகள் வெற்றி பெற எந்த தியாகத்தையும் செய்ய திமுக தயாராக இருக்கிறது.

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு மக்கள் தாங்களாகவே முன்வந்து நிலம் கொடுப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். சேலம் விமான நிலையத்தில் நின்று முதல்வர் பேட்டி கொடுக்கிறார். பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்துப் பேசிவிட்டு பின்னர் பதில் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். அந்த திட்டத்தை எதிர்க்கவில்லை. மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் அதனை செயல்படுத்தலாம். இல்லையென்றால், நிபுணர் குழு அமைத்து மாற்று வழி இருக்கிறதா என ஆராய்ந்து திட்டத்தை செயல்படுத்தலாம். கமிஷனுக்காகத் தான் தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் அல்ல. கொள்ளையடிப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x