

சென்னை: கவரப்பேட்டை அருகே ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விசாரித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ரயில் விபத்துகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
இந்த ரயில் வெள்ளிக்கிழமை இரவு 8.27 மணி அளவில், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டது. மேலும் ரயிலின் பார்சல் பெட்டியில் அடிப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீஸார், ஆர்.பி,எஃப். போலீஸார், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதவிர, 3 பயணிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை இன்று (அக். 12) சந்தித்து நலம் விசாரித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “அமைச்சர், எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநில அரசு சார்பில் 22 ஆம்புலன்ஸ்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன.
எந்த உயிரிழப்பும் இல்லை. ஸ்டான்லி மருத்துவமனையில், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மாவட்ட நிர்வாகம், மருத்துவக் குழுவினர் உள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து மீட்பு பணியை கண்காணித்து வருகிறார். ரயில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தொடர்ச்சியாக விபத்துக்கள் நடக்கின்றன” என்று கூறினார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே பாக்மதி விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தை அறிந்து அதிர்ச்சியுற்றோம். இந்த விபத்தையடுத்து, முதல்வர் உத்தரவின் பேரில் முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் விபத்தில் காயமுற்று, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் விபத்து & அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளைச் சற்று நேரம் முன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம்.
காயமுற்றுள்ள பயணிகளுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதன் விவரம் குறித்து, மருத்துவமனை டீனிடம் கேட்டறிந்தோம். சிகிச்சையில் உள்ளோருக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளையும் உடனுக்குடன் அளிக்க ஆலோசனைகளை வழங்கினோம்.
மேலும், விபத்து நடந்த இடத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விவரம், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான மாற்று ஏற்பாடு, உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் போன்றவை குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தோம். சிகிச்சையில் உள்ள அனைவரும் விரைந்து நலம்பெற விழைகிறேன்” என தெரிவித்துள்ளார்.