Published : 26 Jun 2018 07:30 AM
Last Updated : 26 Jun 2018 07:30 AM

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: அடிக்கல் நாட்டு விழாவில் மோடி பங்கேற்கிறார்- தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதன் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற உள்ளார். தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை மத்திய பாஜக அரசு கொடுத்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைத்துள்ளது. மாவட்டந்தோறும் நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

சென்னை - சேலம் பசுமைவழிச் சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும், இயற்கைக்கு பாதிப்பில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களை பாராட்ட மனமில்லாத பல கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

ஆளுநரின் சுற்றுப்பயணத்தை திமுக தேவையில்லாமல் அரசியலாக்கி வருகிறது. ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டப்படி உள்ள உரிமை, அதிகாரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைச் செய்யவிடாமல் தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் இருக்கும்போது அவற்றை விட்டுவிட்டு இந்தப் பிரச்சினையை திமுக கையில் எடுத்திருக்கிறது. இதனால் இவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது.

அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை. இது வரலாற்று உண்மை. இதைச் சொன்னால் அதற்கு எதிர்கருத்தை கூறாமல் தகுதியைப் பற்றி பேசுகின்றனர். தகுதி குறித்து அன்புமணியுடன் விவாதிக்க தயாராக இருக்கி றேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x