Published : 11 Oct 2024 06:38 AM
Last Updated : 11 Oct 2024 06:38 AM
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மைத்துனருமான முரசொலி செல்வம் பெங்களூரில் நேற்று காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன்’ என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘முரசொலி’ நாளிதழில் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றிவர் முரசொலி செல்வம் (82). இவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சகோதரி மகனும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடன்பிறந்த சகோதரரும் ஆவார். கருணாநிதியின் மூத்த மகளும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடன்பிறந்த சகோதரியுமான செல்வியைதிருமணம் செய்துகொண்ட முரசொலி செல்வம், பெங்களூருவில் வசித்து வந்தார்.
இவர் வழக்கம்போல, நேற்று முன்தினம் இரவு முரசொலி நாளிதழின் கட்டுரைக்காக குறிப்புகள் எழுதிவிட்டு, பின் உறங்கச் சென்றார். அப்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, குடும்பத்தினர், அவரைபெங்களூரில் உள்ள தனியார்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார்.
முரசொலி நாளிதழில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். பல்வேறு திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பூம்புகார் புரொடக்ஷன்ஸ் சார்பில் திருட்டு ராஜாக்கள், காவல் கைதிகள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
தலைவர்கள் ஆறுதல்: மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் நேற்று மாலை 6 மணி அளவில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, மற்றும் துரைமுருகன், பொன்முடி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், உள்ளிட்ட அமைச்சர்கள், மதிமுகபொதுச் செயலாளர் வைகோ, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோபாலபுர இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முரசொலி செல்வத்தின் உடல் இன்று (11-ம் தேதி) சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
தோளோடு தோள் நின்றவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப்பருவம் முதலே திறம்படச் செயலாற்றியவர் முரசொலி செல்வம். ‘சிலந்தி’ என்ற பெயரில் முரசொலியில் அவர் எழுதிய நையாண்டியும், நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகள் கழகத்தின் இளைய தலைமுறையினருக்குக் கொள்கை ரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை.
சிறுவயது முதலே எனக்கு வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர். கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதேபோல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மநீம தலைவர் கமல்ஹாசன், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்டோரும் முரசொலி செல்வம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முரசொலி செல்வம் மறைவையொட்டி, தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு கட்சி கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT