Published : 16 Jun 2018 09:11 AM
Last Updated : 16 Jun 2018 09:11 AM

தொழில் தொடங்க வாங்க.. தோள் கொடுக்க நாங்க... தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் வெ.இறையன்பு ஐஏஎஸ் நேர்காணல்

மிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியம் இல்லை. மருத்துவம் படிக்க நீட் தேர்வு, பொறியியல் சேர கலந்தாய்வு என ஒருபுறம் தொழில்கல்வி படிப்புகளில் சேர பிளஸ் 2 மாணவர்கள் முட்டி மோதுகின்றனர். கலைக் கல்லூரிகளில் சேரவும் கடும் போட்டி நிலவுகிறது. இவ்வளவு சிரமப்பட்டு படிப்பை முடித்தால், அடுத்து வேலைவாய்ப்பு பிரச்சினை.

இத்தகைய சூழலில், அரசு வேலைக்காகவோ, தனியார் வேலைக்காகவோ அலையும் இளைஞர்கள் தாங்களே ஒரு தொழில் தொடங்கும்போது அவர்களுக்கு வேலை கிடைப்பதோடு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் வேலை தரக்கூடியவர்களாகவும் மாற முடியும். தொழில் தொடங்க பட்டப் படிப்பு, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் என்பதில்லை. நிறைய படித்தவர்கள், குறைவாக படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருமே சொந்தமாகத் தொழில் தொடங்கலாம். எல்லாவற்றுக்கும் அடிப்படை ‘ஆர்வம்.’ அந்த வகையில், சுயமாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்குத் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது தமிழக அரசின் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். இந்நிறுவனத்தின் தோற்றம், செயல்பாடு, அது வழங்கிவரும் சேவைகள், பயிற்சிகள் என பல்வேறு தகவல்களைத் தந்து வழிகாட்டுகிறார் அந்நிறுவனத்தின் இயக்குநரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான வெ.இறையன்பு. இனி, அவருடனான நேர்காணல்..

தமிழகத் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வை, தொலைநோக்கு வாசகம் என்ன?

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தொலைநோக்கு வாசகம் என ஒன்று இருக்கும். அது, எளிதில் அடைய முடியாததாகவும், அதிக முயற்சிகள் தேவைப்படுவதாகவும் இருக்க வேண்டும். அதே நேரம், சாத்தியமானதாகவும் இருக்க வேண்டும். அந்த வாசகமே பணி யாளரை ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும். திருவள்ளுவர் கூறியதுபோல, கான முயலைக் குறிபார்த்து வெல்வதில் பயன் இல்லை. அதேபோன்று நுனிக்கொம்பில் ஏறி உயிருக்கு இறுதியை சந்தித்துவிடவும் கூடாது. அந்த வகையில், தமிழக இளைஞர்கள் வேலை தேடாமல், வேலை தருபவர்களாக மாறி வெளிநாடுகளில் தமிழகப் பொருட்கள் என்ற வில்லையுடன் பெருமையாக விற்கும் அளவுக்கு தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்பதே இதன் நோக்கம். ‘தொழில் தொடங்க வாருங்கள், தோள் கொடுக்க நாங்கள்’ என்பதே எங்கள் தொலைநோக்கு வாசகம்.

தொழில் முனைவோர் ஆவதால் என்ன மாற்றம் ஏற்படும்?

படிக்கும்போதே, ‘தொழில் முனைவோர் ஆகவேண்டும்’ என்கிற முனைப்போடு படிப்பதால், அவர்களது பார்வை பரந்து விரியும். புதிய கருத்துகள் தோன்றும். உள்ளூரில் கிடைக்கும் மூலாதாரங்களை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதோடு, சந்தை யில் உள்ள இடைவெளியை அவர்கள் நிரப்ப முடியும். இதனால் பலருக்கு வேலை கிடைக்கும். உள்ளூர் பொருளாதாரம் பரவலாகும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதோடு, இறக்குமதிகளின் தேவை குறையும்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது? இது எந்தத் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது?

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் 2001-ம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இது குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

இந்த நிறுவனத்தின் நோக்கம் என்ன?

பெரிய தொழிற்சாலைகள் வந்தால், செழிப்பு சொட்டுச் சொட்டாகக் கசிந்து சமூகத்தின் அடித்தட்டு மக்களும் பயன்பெறுவார்கள் என்கிற ஊகத்தின் அடிப்படையில் அவற்றை முன் னிறுத்திய காலங்கள் இருந்தன. ஆனால் அந்த ஆலைகளைச் சுற்றிக் குடியிருந்த மக்கள் குடிசையிலேயே இருந்தனர்.

அவர்கள் வாழ்வில் வறுமை தாண்டவமாடியதே தவிர, வசந்தம் வீசவில்லை. பொருளாதாரம் சிலரிடம் தேங்காமல் பலரிடம் பாயும்போதுதான் குட்டையாக இல்லாமல் ஓடையாக உருப்பெறும். அது குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூலமே சாத்தியம். பாரம்பரியமான தொழில் முனைவோர் பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கும் முதலீட்டை ஏற்கெனவே பெற்றிருக்கிறார்கள்.

புதிய தொழில் முனைவோர் மட்டுமே சின்ன தொழில்களில் கவனம் செலுத்துவார்கள். கம்பரின் கூற்றுக்கிணங்க, ஏழை உழவர் தன் சின்ன வயலை உன்னிப்பாகப் பாதுகாப் பதுபோல அதைக் கட்டிக் காப்பார்கள். எனவே, பெருமளவில் புதிய தொழில் முனைவோரை ஊக்குவிப்பதன் மூலமாகவே அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் அழகு சேர்க்க முடியும். எங்கள் நிறுவனம் தொழில் முனை வதற்கான சிறந்த சூழலை உருவாக்கி, உற்பத்தித் துறையில் புதுமையான சுய தொழில்களைப் பெருக்கி, எண்ணற்ற தொழில் முனைவோரை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இயங்கி வருகிறது. ‘சிறுகச் சிறுக முதலிடு, உழைத்து உழைத்துப் பெருக்கிடு, விரிவுபடுத்திப் பகிர்ந்திடு’ என்பதே இதன் தாரக மந்திரம்.

நிறுவனத்தின் செயல்பாடுகள் யாவை?

தொழில் தொடங்க விரும்புகிறவர்கள் எங்களிடம் வந்தால் அவர்களது பின்னணி, சக்தி, ஆர்வம், சந்தை நிலவரம் போன்றவற்றை அறிந்து ஆலோசனை வழங்குகிறோம். தொழில் முனைவோராக மாற அவர்களுக்கு வழிகாட்டவும் செய்கிறோம். தொழில் தொடங்கும் ஆர்வம் மட்டும் இருந்து, எப்படிச் செல்வது எனத் தெரியாமல் தடுமாறுபவர் களுக்குச் சுட்டுவிரலாய் இருக்கிறோம்.

இன்ன தொழில்தான் செய்யப்போகிறோம் என்ற முடிவுடன் இருக்கும் சிலர் முதலீடு இல்லாமல் சிரமப்படுகிறார்களே, அவர்களுக்கு என்ன செய்கிறீர்கள்?

பெரும்பாலும் திட்ட வரைவை முறையாக தயாரிப்பதில்தான் பலர் சிரமப்படுகிறார்கள். அவர்கள் அதை சரியான முறையில் தயாரித்துவிட்டால், வங்கிகள் கடன் கொடுக்க சித்தமாக இருக்கின்றன. எனவே, மாதிரித் திட்டங்களை அவர்களுக்குத் தந்து உதவுகிறோம். அவர்கள் தயாரிக்கும் திட்டங்களை செம்மைப்படுத்தி வங்கிகள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு முழுமை அடையவும் ஆலோசனை தருகி றோம்.

இந்த நிறுவனத்தில் என்ன மாதிரி பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன?

தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறு பவர்கள் தொழில் தொடங்கும் முன்பு எங்கள் நிறுவனத்தில் கட்டாயப் பயிற்சி பெறுகின்றனர். அதில் தொழிலை செம்மையாக நடத்து வதற்கான நுணுக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இது தவிர, புதிய தொழில் முனை வோருக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தொழில்முனைவோரை அணுகவேண்டிய வழிமுறைகள் பற்றி அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம். இது தவிர, கல்லூரி மாணவர்களுக்கும் ஒருநாள் பயிற்சி வழங்கப் படுகிறது.

அறையில் பயிற்சி அளித்து ஒருவரை தொழிலதிபர் ஆக்கிவிட முடியுமா?

கருத்தாக்கம்தான் செயல்பாட்டின் ஆணிவேர். கருத்தில் தெளிவு இருந்தால், செயல்பாடும் சிறப்பாக இருக்கும். தவிர, நாங்கள் அலுவலர்களைக் கொண்டு மட்டுமே பயிற்சி அளிப்பதில்லை. வீதியில் திரிந்து முயற்சியால் வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறியவர்களையும் அழைத்து அனுபவப் பகிர்வை பிழிந்துதரச் செய்கிறோம். தொழில் முனைவோருக்கான அறிவுப் பயணங்கள், உலாக்கள் போன்றவற்றை நிகழ்த்தி ‘பார்ப்பது நம்பிக்கைக்கு அடிப்படை, செய்வது கற்றலின் ஆதாரம்’ என்ற விரிவாக்கக் கோட்பாட்டை செயல்பாடுகளில் கடைபிடிக்கிறோம்.

தொழில் முனைவோருக்கு அதிக அனு பவங்கள் கிடைக்க என்ன முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள்?

பன்னாட்டுக் கண்காட்சிகளில் அவர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்கிறோம். புதிய தொழில் முனைவோரைத் தேடும் பெரிய நிறு வனங்களை இளைஞர்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறோம். சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வர பரிந்துரைக்கிறோம். இவையெல் லாம் ‘நம்மால் முடியும்’ என்கிற நம்பிக்கையை அவர்கள் இதயத்தில் நங்கூரம்போல பாய்ச்சுகின்றன.

தொழில் முனைவோர் ஆவதற்கு இதுபோன்ற பயிற்சிகள் போதுமா?

ஆர்வம் இருந்தால் பயிற்சி உதவும். இந்தியாவில் வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறிய பலரைப் பற்றி பிரகாஷ் ஐயர் என்பவர் ‘உங்களாலும் முடியும்’ என்கிற புத்தகம் எழுதியிருக்கிறார். மும்பையில் ரயில் நிலைய நடைமேடையில் தூங்கிய வேலுமணி என்பவர் ‘தைரோ கேர்’ என்ற நிறுவனத்தின் உரிமையாளராக ஆனார். அதைப் பற்றிக் கூறும் நூலாசிரியர், ‘ஒரே ஒரு பொறி, வாழ்க்கையைத் திசைதிருப்பும்’ என்று குறிப்பிடுகி றார். எனவே, பயிற்சியால் பொறிதட்ட வாய்ப்பு இருக்கிறது. அது பொறி பறக்காமல் காப்பாற்றவும் உதவக்கூடியது. பயிற்சியும், முயற்சியும் இணைந்தால், உயர்ச்சி சாத்தியமாகும்.

முப்பது, நாற்பது பேர் சேர்ந்து ‘எங்களுக்குப் பயிற்சி வேண்டும்’ என்று கேட்டால் அளிப்பீர்களா?

மகிழ்ச்சியுடன் அளிப்போம். ஏனென்றால் அதுவே எங்கள் மையப் பணி. அவர்கள் எந்தத் தொழில் தொடங்கப் பயிற்சி வேண்டும் எனத் தெரிவித்தால் அதில் விற்பன்னர்களை அழைத்துப் பயிற்சி அளிப்போம்.

இந்த நிறுவனம் மூலம் எந்தவிதமான ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன?

எங்கள் அலுவலகத்தில் ‘தொழில் ஆலோசனை மையம்’ செயல்படுகிறது. வேலை நாட்களில் இளைஞர்கள் தொழில் தொடங்க ஆலோசனை கேட்டு வந்தால் அவர்கள் வசதிக்கேற்ப எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற பல்வேறு வாய்ப்புகள் கொண்ட தாம்பாளம் அவர்கள் முன் வைக்கப்படுகிறது. இது தவிர, தமிழகத்தின் பல்வேறு மையங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ‘தொழில் முனைவோர் கிளினிக்’ என்ற சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த ஆலோசனைகளின்போது, முதலில் தொழில் வாய்ப்புகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோம். அதோடு தொழிலைத் தேர்ந் தெடுத்தல், தொழில்நுட்பத் தகவல், சந்தைப் படுத்தும் விதம், அரசின் நிதியுதவிகள், வல்லுநர் மூலம் தொடர் தொழில் வழிகாட்டுதல் போன்ற உதவிகளும் வழங்கப்படும்.

ஏற்கெனவே ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு என்ன மாதிரி உதவி அளிக்கிறீர்கள்?

தொழிலைத் தேர்வு செய்தவர்களுக்கு ஒரு வார காலத்துக்கு வணிகத் திட்டம் தயாரிக்கும் பயிற்சி அளிக்கிறோம். பிறகு, 3 வார கால தொழில் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கிறோம். அதில் மூலப்பொருட்கள் தருவித்தல், உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துதல், கணக்குகள் பராமரித்தல், வரவு செலவைக் கணக்கிடுதல், வரி நிர்வகித்தல், அரசு உதவி பெறுதல் போன்ற நுட்பங்கள் கற்றுத் தரப்படுகின்றன.

தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தை தொலைபேசி, இ-மெயிலில் தொடர்புகொண்டு ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் பெற முடியுமா?

முடியும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பல்வேறு நபர்கள் தொலைபேசி மற்றும் இ-மெயில் வாயிலாக தினமும் தொடர்புகொண்டு முதல்கட்ட ஆலோசனைகளை பெறுகின்றனர். எங்கள் நிறு வனத்தை 044-2225 2081/ 82/ 83/ 84 ஆகிய தொலைபேசி எண்களிலும், dir@editn.in, addl.dir@editn.in ஆகிய இ-மெயில் மூலமாகவும், எங்கள் இணையதளம்www.editn.in-ல் உள்ள கேள்வி-பதில்கள் மூலமாகவும் தகவல்களைப் பெறலாம்.

வளர்ந்துவரும் இன்றைய சூழல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த பணிகளில் என்னென்ன சுய வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளீர்களா? அவற்றில் ஈடுபட இளைஞர்கள் எந்த முறையில் ஊக்குவிக்கப்படுவார்கள்?

தகவல் தொழில்நுட்பத் துறையில் இணைய வழி சந்தை படுத்துதல், Virtual Assistant, Technical writing, Website development, Graphic design, Animation, BPOs/ Customer Care, Mobile app development, E-publication, Digital media எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இந்த வகையான தொழில்களில் ஈடுபட இளைஞர் களுக்கு தேவையின் அடிப்படையில் ஆலோ சனைகள், பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

நீங்கள் ஏன் தொழில்முனைவோராக ஆகவில்லை?

நானே ஆகிவிட்டால், அப்புறம் தொழில்முனைவோரை யார் ஊக்கப்படுத்துவது!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x