முரசொலி செல்வம் உடலுக்கு தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா அஞ்சலி

முரசொலி செல்வம் உடலுக்கு தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா அஞ்சலி
Updated on
1 min read

சென்னை: கோபாலபுரத்தில் வைக்கப்பட்டிருந்த முரசொலி செல்வத்தின் உடலுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்.10) காலமானார். அவருக்கு வயது 84. திமுகவினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் முரசொலி செல்வத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இன்று மாலை பெங்களூரில் இருந்து சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு முரசொலி செல்வம் உடல் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முரசொலி செல்வம் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா கோபாலபுரத்தில் வைக்கப்பட்டிருந்த முரசொலி செல்வத்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், திரையுலகில் இருந்து, ராதிகா, பிரசாந்த், சத்யராஜ், நடிகர் விக்ரம் மனைவி ஷைலஜா உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in