Published : 10 Oct 2024 06:03 AM
Last Updated : 10 Oct 2024 06:03 AM
சென்னை: தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை வழங்குவோம் என்று கூறி தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மத்தியஅரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்றால் மட்டுமே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கு (எஸ்.எஸ்.ஏ.) வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 165 கோடியைவழங்குவோம் என்று கூறி தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் அப்போதுகுற்றம்சாட்டினர்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டாலும் மெட்ரோ ரயில் பணிகளுக்கு தமிழக அரசுநிதி வழங்கியதுபோல ஆசிரியர்களுக்கும் அமைச்சுப் பணியாளர்களுக்கும் இந்த அரசு நிதி வழங்கும். நாளை ஒருநாள் மட்டும் வேலைநாள். அப்புறம் 3 நாட்கள் விடுமுறை. அதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை இன்றுமாலைக்குள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தலைவர்கள் பேசினர்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு: தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தும் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மத்திய அரசு நிர்பந்தத்தால் தமிழகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை காற்றில் பறக்கவிட முடியாது. ஒருபோதும் மத்தியஅரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: சுமார் 35 ஆயிரம் ஆசிரியர்கள் ஊதியம் இல்லாமல் தவிப்பதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனே நிதியை விடுவிக்க வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. புதிய கல்வி முறையை நடை முறைப்படுத்தாததால் நிதியை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
முன்னதாக, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் பேசினர்.
செப்டம்பர் சம்பளத்தை வழங்கியது தமிழக அரசு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ‘ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 32,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என நேற்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்களுக்குரிய செப்டம்பர் மாத சம்பளம் நேற்று வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT