

சேலம் மாவட்ட எல்லைக்குள் டூரிஸ்ட் பஸ், வேன், கார் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று நீக்கியது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கல்வி உரிமை மாநாடு இன்று (17-ம் தேதி) மாலை 4 மணிக்கு சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் நடக்கிறது. மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கொடி ஏற்றி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். பின், கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
மாநில அளவில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், மாநாடு நடத்த சேலம் மாவட்ட போலீஸார் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். மாவட்ட மாநாடு நடத்தினால் அனுமதி தருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின், அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. பின் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூலம் கல்வி உரிமை மாநாடு நடத்த அனுமதி பெறப்பட்டு இன்று மாலை மாநாடு நடக்கிறது.
அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும், கட்டாயக் கல்வி, கட்டணமில்லாத கல்வி அளிக்க வேண்டும், தாய்மொழியில் கல்வியை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தொல்.திருமாவளவனுக்கு 53-வது பிறந்த நாள் என்பதால், அவருக்கு 53 பவுன் தங்கக் காசுகளை நிர்வாகிகள் பொற்கிழியாக வழங்கவுள்ளனர்.
மாநிலம் முழுவதும் இருந்து வாகனங்களில் தொண்டர்கள் வரும்போது, வழியில் ரகளை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் போலீஸார் மாநில மாநாடுக்கு அனுமதி மறுத்தனர். எனினும், உயர் நீதிமன்ற அனுமதியுடன் மாநாடு நடத்தப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் 144, 143 தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த தடை உத்தரவுப்படி மாநாடு கூட்டம் நடத்தலாம். ஆனால், சேலம் மாவட்ட எல்லைக்குள் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா செல்லக்கூடிய பஸ், கார், வேன் உள்ளிட்ட எந்த வாகனமும் உள்ளே வரக்கூடாது.
அதேபோல, கனரக வாகனங்களான லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களும், தேசிய பர்மிட் பெற்ற சுற்றுலா வாகனங்களும் சேலம் மாவட்ட எல்லைக்குள் வர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு சனிக்கிழமை மாலை 6 மணி முதல் வரும் 18-ம் தேதி காலை 6 மணி வரை நீடிக்கும் என ஆட்சியர் விதித்த தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நடைபெறவுள்ள கல்வி உரிமை மாநாட்டில் தனியார் வாகனங்களில் கலந்துகொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு, அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், சேலம் மாநாட்டிற்கு தனியார் வாகனங்களில் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டார். அதேவேளையில், லாரி போன்ற திறந்த வாகனங்களில் செல்லக்கூடாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.