“தமிழக அரசே... சாம்சங் தொழிலாளர்களை போராட விடு!” - பா.ரஞ்சித் ஆவேசம்

“தமிழக அரசே... சாம்சங் தொழிலாளர்களை போராட விடு!” - பா.ரஞ்சித் ஆவேசம்

Published on

சென்னை: “கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டபூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அணுகுமுறை” என சாம்சங் ஊழியர்கள் போராட்டம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டபூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அணுகுமுறை.

தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்புக்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல் துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே... தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!” என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in