வான் சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழப்பு: அரசிடம் விசாரிக்கக் கோரி மனித உரிமை ஆணையத்தில் அதிமுக புகார் மனு

வான் சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழப்பு: அரசிடம் விசாரிக்கக் கோரி மனித உரிமை ஆணையத்தில் அதிமுக புகார் மனு

Published on

சென்னை: வான் சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் விசாரணை நடத்தக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஆணையத்தின் தலைவருக்கு அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை அனுப்பிய மனுவின் விவரம்: “விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய வான் சாகச நிகழ்ச்சி அக்.6-ம் தேதி நடந்து முடிந்தது. இதில் பங்கேற்க 15 லட்சம் பேர் வருவார்கள் என மாநில அரசுக்கு முன்பே தெரிந்திருந்தும் கூட்டத்தை கையாள்வதற்கும், போக்குவரத்து வசதிகளைச் செய்யவும் முறையாக திட்டமிடவில்லை. தமிழக முதல்வர், துணை முதல்வர், குடும்பத்தினருக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்த வேளையில், பொதுமக்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளனர்.

குறிப்பாக, பார்வையாளர்களுக்கு போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர காலத்துக்கு ஏற்ப போதிய மருத்துவ வசதி உள்ளிட்டவை செய்யப்படவில்லை. இதன் மூலம் கூட்டத்தை கையாள்வதில் மாநில அரசு முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது. இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளாததால் 5 பேர் உயிரிழந்ததோடு, 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி 5 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, போதிய வசதி செய்து கொடுக்காத மாநில அரசிடம் சுதந்திரமான முறையில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in