புதுச்சேரி ஜிப்மரை தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை

படங்கள்: எம். சாம்ராஜ்
படங்கள்: எம். சாம்ராஜ்
Updated on
1 min read

புதுச்சேரி: ஜிப்மரைத் தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்துக்கு இன்று (புதன்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனைக்குப் பின் வெடிகுண்டு மிரட்டல், புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் குறித்து இ-மெயில் அனுப்பிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜிப்மர் இயக்குநருக்கு இன்று இ-மெயில் மிரட்டல் ஒன்று வந்தது. அதில், ‘புதுவை பிரெஞ்சு தூதரகம் மற்றும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து விடும்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து ஜிப்மர் இயக்குநர் புதுவை போலீஸ் தலைமையகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பிரெஞ்சு தூதரக அலுவலகம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். துணைத் தூதரகத்துக்குள் சென்ற போலீஸார், அங்கிருந்த அனைவரையும் வெளியே அனுப்பினர். அதன்பின் அறை, அறையாக வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. பகல் 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. ஆகவே வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்தது. காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியிலும் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in