சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலில் தாக்கப்பட்ட மாணவர் உயிரிழப்பு - 5 பேர் கைது

உயிரிழந்த மாணவர்
உயிரிழந்த மாணவர்
Updated on
2 min read

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதலில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநில கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி இன்று (புதன்கிழமை) உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன் பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (45) இவருடைய மகன் சுந்தர் (19 ) என்பவர் பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. அரசியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி சுந்தர் கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்ல சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது ரயில் நிலைய வாசலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் சுந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த சுந்தர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக பெரியமேடு போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான சந்துரு (20), யுவராஜ் (20), ஈஸ்வர் (19), ஹரி பிரசாத் என்கிற புஜ்ஜி (20), கமலேஸ்வரன் (19) ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுந்தர் இன்று(புதன்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

மாணவர் உயிரிழந்த சம்பவ எதிரொலியாக சென்னை மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வேப்பேரி காவல் உதவி ஆணையர் கண்ணன் தலைமையில் சட்டம் - ஒழுங்கு போலீசாரும், ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் மதுசூதன ரெட்டி தலைமையில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநில கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் மோதல் சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க அரக்கோணம் சென்னை-கும்மிடிப்பூண்டி சென்னை வழித்தடங்களிலும் மின்சார ரயில்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதலில் இறந்த சுந்தர் அவரது பெற்றோரான ஆனந்தன்- அமராவதி தம்பதி கூலி வேலைக்குச் செல்பவர்கள் என தெரியவருகிறது.

சுந்தருக்கு இரண்டு சகோதரிகள். அதில் ஒருவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து பேசிய சுந்தரின் பெற்றோர், “சுந்தர் படித்து பெரிய ஆளாகி, எங்களை நல்லபடியாக கவனித்துக் கொள்வான் என நினைத்திருந்தோம். ஆனால், எங்களை இப்படி நிற்கதியாய் விட்டுச்சென்று விட்டான். எங்களுக்கு நடந்தது போல் கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது" என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதனிடையே, மாணவர் சுந்தர் உயிரழந்ததை அடுத்து மாநில கல்லூரிக்கு திங்கள் கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் கல்லூரி வழக்கம் போல் செயல்படும் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். அதேசமயம், மாநிலக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இன்று காலையில் சுந்தருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்று காலை 11 மணி முதல் வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in