ரூ.22.69 கோடியில் 25 தாழ்தள பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

ரூ.22.69 கோடியில் 25 தாழ்தள பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கென கொள்முதல் செய்யப்பட்ட 25 தாழ்தள பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், ஜெர்மன் துணைத் தூதர் மைக்கேலா குச்லர் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 352 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பல கட்டமாக இது நாள் வரை ரூ.170.60 கோடியில் 188 தாழ்தள பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.22.69 கோடி மதிப்பீட்டில் அடுத்தக்கட்டமான 25 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை, பல்லவன் சாலையில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், ஜெர்மன் துணைத் தூதர் மைக்கேலா குச்லர் ஆகியோர் கொடியசைத்து பேருந்துகளைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பேருந்தில் சிறிது தூரம் பயணித்தனர்.

இந்நிகழ்வில், மைக்கேலா குச்லர் பேசும்போது, நான் தொடர்ச்சியாக மாநகர பேருந்துகளில் பயணிக்கிறேன். இங்கு பெண்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கட்டணமில்லா பயண சேவையை, பெண்ணிய பார்வையில் பாராட்டுகிறேன். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5 சி வழித் தடத்தில் தாழ்தள பேருந்துகளை இயக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.” என்றார்.

மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசும்போது, “சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பேருந்துகளை இயக்கும் வகையில் ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவி மூலம் சுமார் ரூ.7,492 கோடி மதிப்பீட்டில் 5 கட்டமாக திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,213 பி எஸ் 6 டீசல் பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள், 552 தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இத்திட்டத்தில் பேருந்துகள் கொள்முதல் தவிர்த்து, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துக்கான நவீன மென்பொருள் உருவாக்கம், நவீன தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ளும் வகையில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளது” என்றார்.

இந்நிகழ்வில், போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, ஜெர்மன் வங்கியின் இந்திய நாட்டுக்கான இயக்குநர் உல்ஃப் முத், முதுநிலை போக்குவரத்து நிபுணர் சுவாதி கண்ணா, மாநகர போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் நடராஜன், சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் சு.ரங்கநாதன், போக்குவரத்து நிதி கழக இணை மேலாண் இயக்குநர் வெங்கட் ராஜன், தொமுச பொருளாளர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in