

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், எழும்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, பெங்களூரு வா.புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அதிமுக ஒருங்கிணைந்து வெற்றி பெற வேண்டும் என்னும் தொண்டர்களின் எண்ணம் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம். முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகியோர், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் அனைத்து வசதிகளையும் பெற்றவர்கள் என்பதை மனதில் வைத்து, ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு கட்சியை காப்பாற்ற முன்வர வேண்டும்.
அடுத்தகட்ட தலைவர்களும் கட்சியின் தோல்வியை வேடிக்கை பார்க்காமல் பழனிசாமியிடம் எடுத்துரைக்க வேண்டும். ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபடாமல் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதோடு, ஒத்துழைக்காத தலைவர்கள் வீட்டுமுன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.