கோப்புப்படம்
கோப்புப்படம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

Published on

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்முறை அமைச்சரவைக் கூட்டம் இன்று (அக்.8) கூடியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தொழில் முதலீடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் அனுமதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், முதல்வர் பயணத்தின் அடிப்படையிலான அமெரிக்க முதலீடுகள், புதிய நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் உள்ளிட்டவை குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கபடவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்.28-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அமைச்சரவையில் அவருக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகிய 3 பேர் விடுவிக்கப்பட்டனர். வி.செந்தில்பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

புதிய அமைச்சர்கள் செப்.29-ம் தேதி பதவியேற்றனர். இதுதவிர க.பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிவ.வீ.மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 அமைச்சர்களின் துறைகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. அவர்களும் அந்தந்த துறைகளின் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in