

சென்னை: காவல், தீயணைப்பு, தடய அறிவியல் துறைகள் சார்பில் ரூ.78.81 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலியில் திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி - நாகர்கோவில், புதுக்கோட்டை - மழையூர், சிவகங்கை – பள்ளத்தூரில் ரூ.29.81 கோடியில் 169 காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மேலும்,ராமநாதபுரம் - ராமேசுவரம் துறைமுகம் பகுதி, திருப்பூர் - வீரபாண்டியில், ரூ.2.97 கோடியில் 2 காவல் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு - ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக வளாகத்தில் ஒருங்கிணைந்த இணையதள குற்ற ஆய்வக வளாகம் , திருப்பூர் மாவட்டத்தில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், என ரூ.23 கோடியே 48 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 காவல் துறைக் கட்டிடங்கள் என ரூ.56 கோடியே 26 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், தீயணைப்புத் துறை சார்பில், தேனி - போடிநாயக்கனூர், சென்னை - தி.நகர் மற்றும் மணலி, மதுரை - மீனாட்சியம்மன் கோயில் மற்றும் கள்ளிக்குடி, நாமக்கல் - கொல்லிமலை, தஞ்சாவூர் - திருவையாறு ஆகிய இடங்களில் ரூ.18.78 கோடியில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான கட்டிடங்களையும் முதல்வர் திறந்தார்.
இதுதவிர, தடய அறிவியல் துறைக்கு தஞ்சாவூரில் ரூ.3 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தடய அறிவியல் மரபணு ஆய்வகப் பிரிவு கட்டிடத்தையும் திறந்தார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால், தீயணைப்புத் துறை இயக்குநர் அபாஷ்குமார், காவல் பயிற்சியக இயக்குநர் சந்தீப் ராய்ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.