

சென்னை: விமானப்படை சார்பில் நேற்று நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சிக்குப் பிறகு மெரினா கடற்கரையில் இருந்து 18.5 டன் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டன.
இந்திய விமானப் படையை நிறுவி 92 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்த்தி நடைபெற்றது. சுமார் 15 லட்சம் பேர் இதைப் பார்வையிட்டனர். இதனால் அங்கு அதிக அளவில் குப்பை சேர்ந்தது.
இந்நிலையில், மாநகராட்சிக்கு தூய்மை சேவை வழங்கும் அர்பேசர் ஸ்மித் நிறுவனம் சார்பில் நேற்று அங்கு தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 128 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 18.5 டன் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டும் 4 டன் அளவுக்கு இருந்ததாக அர்பேசர் ஸ்மித் அலுவலர்கள் தெரிவித்தனர்.