

சென்னை: ரவுடிகள் குறித்து கருத்து தெரிவித்த சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், அக்.14-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையராக 2 மாதங்களுக்கு முன்பு அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்கட்டமாக ரவுடிகள் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில், சென்னையில் ரோந்துப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. வடசென்னையில் போலீஸ் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் தலைமையில் ரோந்து சென்ற போலீஸார், ரவுடிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று மீண்டும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தினர்.
திருவொற்றியூரை சுற்றியுள்ள பகுதிகளில் உதவி ஆணையர் இளங்கோவன் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு வசிக்கும் சரித்திர பதிவேடு ரவுடிகளின் வீடுகளுக்கு சென்ற உதவி ஆணையர் இளங்கோவன், அவர்களது குடும்பத்தாரை சந்தித்து பேசி ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்; கொலை வழக்குகளில் சிக்கினால் என்கவுன்ட்டர் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், உதவி ஆணையர் இளங்கோவன் எச்சரித்தது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான எஸ்.மணிகுமார் தலைமையிலான அமர்வு முன்னிலையில் உதவி ஆணையர் இளங்கோவன் ஆஜாராகி விளக்கமளித்தார்.
விசாரணையின்போது, சென்னை மாநகர ஆணையராக அருண் பதவியேற்ற போது, ‘ரவுடிகளுக்கு அவர்களது மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, அதன் அர்த்தம் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தெரியாது என இளங்கோவன் பதிலளித்தார். இதையடுத்து, ரவுடிகள் குறித்து கருத்து தெரிவித்த காவல் ஆணையர் அருண், வரும் அக்.14-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, நீதிபதி எஸ்.மணிகுமார் உத்தரவிட்டார்.