Published : 03 Jun 2018 07:29 AM
Last Updated : 03 Jun 2018 07:29 AM

காவிரி மேலாண்மை ஆணையத்தில் இடம்பெறும் தமிழக உறுப்பினர்கள் அறிவிப்பு: நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினர்களை தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதுகுறித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கும் பரிந்துரை கடிதத்தை தமிழக அரசு அனுப்பியுள் ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த 2007-ல் இறுதி உத்தரவு பிறப்பித்தது. இதில், காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்கவும் தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீர் வழங்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச் சேரி ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய் தன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இவ்வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் அமைக்கப்பட்டது. நீர் பங்கீடு, ஆய்வுகள் மேற்கொள்வது, அணைகளை திறப்பது, இறுதி முடிவு எடுப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்க ளும் ஆணையத்துக்கே இருக்கும் என்பதையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு நேற்று அரசிதழில் வெளியிட்டது. அதில் “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டம் 6(ஏ) 1956-ன்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இதன் நகல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.

இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் செயல்வடிவம் பெற்றுள்ளது. அதன் பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக காவிரி ஆணையத்தின் தலைவர் மற்றும் 9 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய நீர்வளத் துறை செயலாளர் யூ.பி.சிங் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிரந்தர தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் அந்த பொறுப்பை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான பகுதிநேர உறுப்பினராக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆர்.செந்தில்குமார் ஆகியோரை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.

தமிழகத்தின் சார்பில் இந்த இருவரையும் உறுப்பினராக நியமிக்கும்படி மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கும் தமிழக அரசின் முதன்மை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த ஆணையத்தின் தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அல்லது அனுபவம் வாய்ந்த தலைமைப் பொறியாளர் நியமிக்கப்படுவார். ஆணையத்தில் 9 உறுப்பினர்கள், 2 முழு நேர உறுப்பினர்கள், 2 பகுதி நேர உறுப்பினர்கள், 4 மாநிலங்களில் இருந்து தலா ஒருவரும் மத்திய அரசு சார்பில் ஒருவரும் பகுதி நேர உறுப்பினர்களாக இடம்பெறுவர்.

காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகள் கர்நாடகாவின் கட்டுப்பாட்டிலும் மேட்டூர், லோயர் பவானி, அமராவதி அணைகள் தமிழகத்தின் கட்டுப்பாட்டிலும் பனசுரசாகர் அணை கேரளாவின் கட்டுப்பாட்டிலும் இருக்கும். அணைகளில் இருந்து நீர் திறப்பு, நீர் இருப்பு மேலாண்மை, ஆய்வு போன்றவற்றை ஆணையம் மேற்கொள்ளும். ஆணையத்தின் அனுமதியின்றி காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் புதிய அணைகள், தடுப்பணைகளை கட்டக் கூடாது.

ஆணையத்தின் செயல்பாட்டுக்காக, ஆரம்பகட்ட நிதியாக மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும். பிறகு அனைத்து செலவுகளையும் கர்நாடகாவும் தமிழகமும் தலா 40 சதவீதமும் கேரளா 15 சதவீதமும் புதுச்சேரி 5 சதவீதமும் ஏற்க வேண்டும். நீர் இருப்பைக் கண்காணிப்பது, திறந்து விடுவது, சேமிப்பது ஆகியவற்றை ஆணையம் கவனிக்கும். இதற்காக கர்நாடக- தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் புதியதாக அளவை நிலையம் அமைக் கப்படும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தை டெல்லியில் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வருவதாக மத்திய நீர்வளத் துறை செயலாளர் யூ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x