Published : 07 Oct 2024 07:33 AM
Last Updated : 07 Oct 2024 07:33 AM
பெரம்பலூர்: எமிஸ் செயலியில் தகவல்கள் பதிவு செய்ய மேலும் 1,800 பேர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், 100 சதவீத தேர்ச்சி பெறக் காரணமாக இருந்த அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கு பரிசளிப்பு, பாராட்டு விழா மற்றும் பணி ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செய்தியாளர்களிடம் கூறியது: ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கவனத்துக்கு எடுத்துச் சென்று, விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களிடையே தலைமைப்பண்பை வளர்க்கும் வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 விதமான மன்றங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பள்ளிகளில் மாதிரி சட்டப்பேரவை, நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் மாணவர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படும்.
ஆசிரியர் பணிச்சுமை குறையும்: திருச்சி மாவட்டத்தில் எமிஸ் செயலியில் தகவல்களை பதிவேற்றம் செய்ய 149 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 1,114 பள்ளிகளின் தகவல்களை பதிவு செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் எமிஸ் செயலியில் தகவல்களைப் பதிவு செய்ய மேலும் 1,800 பேர் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். அதன்பிறகு, ஆசிரியர்களுக்கு எமிஸ் செயலியில் தகவல் பதிவேற்றம் செய்யும் பணிச்சுமை வெகுவாகக் குறையும்.
கல்வித் துறை அலுவலர்கள் மீது வரும் குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை இருக்கும்பட்சத்தில், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். பெரம்பலூர் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT