மதுவிலக்கை அமல்படுத்தினால் 2016-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: தமிழருவி மணியன் பேச்சு

மதுவிலக்கை அமல்படுத்தினால் 2016-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: தமிழருவி மணியன் பேச்சு
Updated on
1 min read

தமிழகத்தில் 2016-ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் சனிக்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் பேசியதாவது:

மதுவிலக்கை அமல்படுத்தவும் டாஸ்மாக் கடைகளை மூடவும் இந்த ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்துவதல்ல. இது தொடக்கம்தான். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம். இது தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. எங்கள் கோரிக்கையை முன்வைத்துதான் போராட்டம் நடத்துகிறோம். இந்தியாவிலேயே மதுவிலக்கை முதன்முதலில் அமல்படுத்தியது தமிழகம்தான். ஆனால், இன்றோ டாஸ்மாக் மூலம் அதிகம் வருவாய் ஈட்டும் மாநிலமாக மாறியுள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் புதிய திட்டத்தை தயாரித்து தமிழக அரசுக்கு கொடுத்தோம். அதை அரசு ஏற்கவில்லை. தமிழகத்தில் ஒரு கோடி பேர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். குடிப்போரின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் இலவச திட்டங்களை அறிவிக்கலாம் என முதல்வர் நினைக்கிறார். அந்த திட்டத்தை அனுபவிக்க மக்கள் இருப்பார்களா?

2016-ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தினால், தமிழகத்தில் உள்ள 2 கோடி பெண் வாக்காளர்கள் உங்களை ஆதரிப்பார்கள். மதுவிலக்கை வலியுறுத்தி கூட்டுப் போராட்டம் நடத்த பாஜக, மதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களையும், சமூக அமைப்புகளையும் சந்தித்து பேசவுள்ளேன்.

இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், காந்திய மக்கள் இயக்க பொதுச்செயலாளர் துறையூர் ஆ.கணேசன், துணைத் தலைவர்கள் திருப்பூர் மு.கந்தசாமி, டாக்டர் டென்னிஸ் கோவில்பிள்ளை, பொருளாளர் பா.குமரய்யா மற்றும் மாவட்ட தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in