Published : 06 Oct 2024 10:36 AM
Last Updated : 06 Oct 2024 10:36 AM

வள்ளலார் சர்வதேச மையம் பணி விரைவில் தொடங்கும்: அவதார நாள் விழாவில் அமைச்சர் சேகர்பாபு தகவல்

கடலூர்: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் 202-வது அவதார தின விழா வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 5 மணி முதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது.

இதில், வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, சத்ய தர்ம சாலையில் சன்மார்க்க கொடியை ஏற்றிவைத்து, அன்னதானம் வழங்கினர். மேலும், வள்ளலார் குறித்தநூல் வெளியிடப்பட்டது. அதேபோல, வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமத்தில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் எம்.பி. விஷ்ணுபிரசாத், அறநிலையத் துறை ஆணையாளர் தர், கூடுதல் ஆணையர் சுகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய்அலுவலர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலையநிர்வாக அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: வள்ளலார் பிறந்த தினத்தை காருண்ய தினமாக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், வள்ளலாரின் 200-வது பிறந்த தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாடி, வள்ளலாருக்கு பெருமை சேர்த்துள்ளார். ரூ.3.6 கோடி நிதி ஒதுக்கி, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில், வடலூரில் வள்ளலார் வாழ்ந்த இடத்தில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. சில இடையூறுகளைத் தாண்டி, மீண்டும் பணி தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x