நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்: நலம் பெற வாழ்த்திய பிரதமர், ஆளுநர், முதல்வருக்கு நன்றி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார். சிலதினங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்தக்குழாயில் வீக்கம் இருந்ததால், ஏற்கெனவே திட்டமிட்டபடி கடந்த மாதம் 30-ம் தேதி இரவு சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் அயோடா மகா தமனியில் இருந்த வீக்கத்துக்கு அறுவைசிகிச்சையின்றி இடையீட்டு சிகிச்சை மூலம் ஸ்டென்ட் உபகரணம் பொருத்தி சரிசெய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் தனியறை வார்டுக்கு மாற்றப்பட்டார். 24 மணிநேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர், நேற்றுமுன்தினம் நள்ளிரவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சில தினங்களுக்கு வீட்டில்ஓய்வில் இருக்குமாறு ரஜினிகாந்தை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நான் மருத்துவமனையில் இருக்கும்போது, விரைவில் உடல்நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையைச் சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நான் நலம்பெற பிரார்த்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனதுமனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதேபோல், எக்ஸ் வலைதளபதிவில், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பலருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in