Published : 11 Jun 2018 02:51 PM
Last Updated : 11 Jun 2018 02:51 PM

மத்திய இணைச் செயலாளர்கள் நியமனம் செய்யும் விவகாரம்; அரசு நிர்வாகத்தை காவி மயமாக்கும் சதி: ராமதாஸ் குற்றச்சாட்டு

மத்திய அரசு நிர்வாகத்தில் இணைச் செயலாளர்கள் நிலையிலான 10 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்ய மத்திய அரசு முயற்சிப்பது, அரசு நிர்வாகத்தை காவி மயமாக்கும் சதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு நிர்வாகத்தில் இணைச் செயலாளர்கள் நிலையிலான 10 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குடிமைப்பணிகளுக்கு தகுதியான ஆட்களை நியமிப்பதற்காக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது; கடுமையாக கண்டிக்கத்தக்கது.

வருவாய், நிதிச்சேவைகள், பொருளாதார விவகாரங்கள், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உழவர்கள் நலன், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்துத் துறை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் வல்லமை பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றிய 40 வயது நிறைவடைந்த தேசத்தைக் கட்டி எழுப்பும் முயற்சிக்கு பங்களிக்க விரும்பும் எவரும் மத்திய அரசின் இணைச் செயலாளர்கள் நிலையிலான பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.1,44,200 - ரூ.2,18,200 என்ற விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசின் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைச் செயலாளர்கள் நிலையிலான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளை நியமிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளின்படி குடிமைப்பணி அதிகாரிகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

ஆனால், இப்போது மத்திய அரசு அறிவித்துள்ள விளம்பரத்தில் 10 இணைச் செயலாளர்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பதிலாக மத்திய அரசால் நியமிக்கப்படும் தேர்வுக்குழு தான் தேர்ந்தெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. குடிமைப்பணிகளுக்கான இணைச் செயலாளர்களை அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்படாத குழுவால் தேர்ந்தெடுக்க முடியாது. அதுமட்டுமின்றி தேர்வுக்குழு மூலம் நியமனங்கள் செய்யப்படும் முறை வெளிப்படையாக இருக்காது.

மத்தியில் 2014 ஆம் ஆண்டு பதவியேற்ற நாளில் இருந்தே கல்வியை காவி மயமாக்கும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இப்போது அடுத்த கட்டமாக மத்திய அரசு நிர்வாகத்தையும் காவிமயமாக்கும் நோக்கத்துடன் தான் தனியார் துறையிலுள்ளவர்களை இணைச் செயலாளர்களாக நியமிக்க மத்திய தீர்மானித்துள்ளது. மத்திய அரசு நிர்வாகத்தில் இணைச் செயலர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பொதுவாக செயலாளர் நிலையிலான அதிகாரிகள் மேற்பார்வைப் பணிகளை மட்டுமே செய்யும் நிலையில் கொள்கை ஆவணங்கள் மற்றும் சட்ட முன்வரைவுகளை இணைச் செயலாளர்கள் தான் தயாரிப்பார்கள். இந்தப் பதவியில் சங்பரிவாரின் பின்புலம் கொண்டவர்களை நியமிப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் தலைமைச் செயலகமாக மாற்றுவது தான் மத்திய அரசின் நோக்கமாகும். 40 வயதில் இணைச் செயலாளராக ஒருவர் நியமிக்கப்பட்டால், அவரது பதவிக்காலம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டால் மத்திய அமைச்சரவை செயலாளர் நிலை வரை உயர முடியும் என்பதால் அரசு நிர்வாகத்தின் மீதான சங்க பரிவாரங்களின் பிடி ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும். இது மிகவும் ஆபத்தானது; இதை அனுமதிக்கவே கூடாது.

அரசுத் துறைக்கு வெளியே பணியாற்றும் வல்லுநர்களின் சேவையை அரசு பெறுவதை, இயல்பான சூழலில், விமர்சிக்க முடியாது. ஆனால், திறமையுள்ளவர்களை ஆலோசகர்களாக நியமிக்கலாமே தவிர, இணைச் செயலாளர் போன்ற குடிமைப்பணிகளில் நியமிக்க முடியாது. அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்வேறு துறைகளின் வல்லுநர்களை அரசு நிர்வாகத்தில் நியமிக்கும் நடைமுறை உள்ளது. ஆனால், இந்தியாவின் நிர்வாகச் சூழல் அமெரிக்கச் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். அமெரிக்காவில் அரசு நிர்வாகத்தில் நியமிக்கப்படுபவர்கள் கொள்கைத் திணிப்புகளில் ஈடுபட மாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அதற்கு மாறான சூழல் நிலவுவது தான் இந்நியமனங்கள் குறித்த ஐயத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, மத்திய அரசில் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர் நிலையில் பணியாற்ற தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, குடிமைப்பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாகவே செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x