சென்னை உலகப் பட விழா விளம்பர பலகையில் எம்ஜிஆர் படமும் இடம்பெற பாஜக கோரிக்கை

சென்னை உலகப் பட விழா விளம்பர பலகையில் எம்ஜிஆர் படமும் இடம்பெற பாஜக கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: “சென்னை உலக சினிமா விழாவுக்கு வைக்கப்பட்ட விளம்பரப் பலகையில் எம்ஜிஆர் படமும் இடம் பெற வேண்டும்” என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.

சென்னை உலக சினிமா விழா சென்னையில் 7 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை உலக சினிமா விழாவுக்கு வைக்கப்பட்ட விளம்பர பலகையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், அறிஞர் அண்ணா, எம்.ஆர்.ராதா, சிவாஜி கணேசன், கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், எம்ஜிஆர் படம் இடம்பெறவில்லை. இதைச் சுட்டிக்காட்டி, அந்த விளம்பர பலகையில் எம்ஜிஆர் படமும் இடம் பெற வேண்டும் என்று தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறுகையில், “சென்னையில் உலக சினிமா விழா நடைபெறுவது நல்ல விஷயம். ஆனால், அந்த நிகழ்வுக்காக வைக்கப்பட்ட விளம்பர பலகையில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் படம் இடம்பெறவில்லை. இதனால், எம்ஜிஆரின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, எம்ஜிஆரின் படத்தையும், விளம்பர பலகையில் இடம்பெறச் செய்து, அந்த விழாவை நடத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், அந்த விழாவில் எம்ஜிஆரின் படத்திற்கு புகழஞ்சலி செலுத்தி விழாவை நடத்த வேண்டும். இது தொடர்பாக, இந்த விழாவை ஒருங்கிணைத்து நடத்தும் நடிகர் ராஜேஷுக்கு தமிழக பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in