‘ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்க’ - முத்தரசன் வலியுறுத்தல்

முத்தரசன் | கோப்புப்படம்
முத்தரசன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “ தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகள் மூலம் உணவு தானியங்கள், காய்கறிகள் பருப்பு வகைகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி, குறைந்த விலையில் கிடைப்பதற்கு, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து அத்தியாவசிய பொருள்களும் நியாய விலைக் கடைகளில் கிடைத்திட அரசு உறுதி செய்திட வேண்டும். அக்டோபர் மாதம் முழுவதும் பண்டிகை நாட்களாக இருக்கிறது. . தற்போது நடந்து வரும் நவராத்திரி விழாவைத் தொடர்ந்து, தீபாவளி பண்டிகை (அக்டோபர் 31) வருகின்றது. பாஜக மோடி தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. வர்த்தக சூதாட்டத்தை ஆதரித்து வரும் மத்திய அரசின் கொள்கையால் விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் வாழ்க்கை நெருக்கடி அதிகரித்து பெரும் துயரத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. வேலையின்மையாலும் வருமானத்துக்கு வழி இல்லாமலும் தவிப்பவர்கள் ஒரு பக்கம், மற்றொரு புறத்தில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வுக்கு வாய்ப்பின்றி வருமானப்பிரிவினர் படும்பாடு பெரும்பாடாகி வருகிறது. பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்து விட்டது.

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணை வகைகள், பூண்டு, வெங்காயம், அரிசி, கோதுமை, ரவா, மைதா, மிளகு, சீரகம், மிளகாய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில், மக்கள் வாழ்க்கை நிலை பற்றி அக்கறை செலுத்தாத மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல், தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகள் மூலம் உணவு தானியங்கள், காய்கறிகள் பருப்பு வகைகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி, குறைந்த விலையில் கிடைப்பதற்கு, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in